இன்றைய 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல்,சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
* தமிழ்நாட்டில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தேவை என்று மருத்துவ குழு முதல்வருக்கு பரிந்துரை அளித்துள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 7ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
* கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். மேலும், 2021-22-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 9.5% ஆக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார். ரிசர்வ் வங்கியின் வட்டிவீதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அறிவித்தார். எனவே, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி வீதம் நான்கு சதவீதம் தொடரும்.
*சென்னையின் முக்கியமான சுற்றுலாத்தளமாக விளங்கும் வண்டலூர் உயிரியியல் பூங்காவில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக பெண்சிங்கம் நீலா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சிங்கங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
*ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கு விநியோகஸ்தர் அளவிலான விலையின் மீது 70 சதவீதம் வரை வர்த்தக உச்ச வரம்பு விலையை (Trade Margins capped at 70%), தேசிய மருந்து விலை ஆணையம்(NPPA) நிர்ணயித்துள்ளது. அறிவிக்கப்பட்ட வர்த்தக விலை உச்சவரம்பின் அடிப்படையில், மாற்றியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை உற்பத்தியாளர்கள் / இறக்குமதியாளர்கள் 3 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். மாற்றியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை, என்பிபிஏ ஒரு வாரத்துக்குள் பொதுவில் அறிவிக்கும் என என்பிபிஏ தெரிவித்தது.
* தென்மேற்கு பருவமழையில் முன்னேற்றம் காணப்படுவதால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலைத்துறையின் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
* மத்திய அரசு தொகுப்பின் கீழ் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பஞ்சாப் மாநில அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு விற்று லாபம் சம்பாதிப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
* தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 651 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 1,971 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 33 ஆயிரத்து 646 நபர்கள் கொரோனாவால் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 463 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துளளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 26 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது.
Tamil Nadu 12th Exam News Live: கர்நாடகா மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து