கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
கேரள மாநிலம் மலப்புரத்தில் குரங்கம்மை அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் குரங்கம்மையா?
கேரள மாநிலம் மலப்புரத்தில் குரங்கம்மை அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எடவண்ணா பகுதியை சேர்ந்த 38 வயது நபர், மஞ்சேசி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக கடந்த 2 ஆண்டுகளில் 2-வது முறையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மற்றும் 524 இறப்புகள் பதிவாகியுள்ளது. இதில் 96% பாதிப்புகள் மற்றும் இறப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தத அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பலத்த சோதனைகளுக்கு பின்னரே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
சுகாதாரத்துறை அதிகாரி பதில்:
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு துபாய் சென்று வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறி ஏற்பட்டுள்ளது. முதலில் அதிக காய்ச்சல் காரணமாக மஞ்சேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுள்ளார். பாதிக்கப்பட்ட இளைஞரின் மாதிரிகள் பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: "நோயாளி சில நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு வந்ததாகவும், உடல்நிலை சரியில்லாமல், முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கிருந்து அவர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். இது குரங்கு காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவரது மாதிரிகளை பரிசோதனைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பினோம். பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.