கையால் மலம் அள்ளும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் வேதனை
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், நாடு முழுவதும் 58,098 பேர் கையால் மலம் அள்ளுபவராக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கையால் மலம் அள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள், முறையான கருவிகளுடன் சாக்கடையில் இறங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டாலும், இது தொடர்பான விதிகள் முறையாக அமல்படுத்துவதில்லை என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
கையால் மலம் அள்ளும் முறை:
தற்போது, நாடு தழுவிய அளவில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் (MoSJ&E) கணக்கெடுத்துள்ளது. அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செயலியான ஸ்வச்சதா அபியானில் இது தொடர்பான தரவுகள் வெளியிடுப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் கையால் மலம் அள்ளும் முறையில் 6,253 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை உண்மையானதா என்பதை அமைச்சகம் இன்னும் உறுதி செய்யவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் சாக்கடையையும் கழிவுநீர் தொட்டியையும் சுத்தம் செய்யும்போது 347 பேர் உயிரிழந்ததாக கடந்தாண்டு ஜூலை மாதம் மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது. உத்தர பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில்தான் 40 சதவிகித உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்:
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், நாடு முழுவதும் 58,098 பேர் கையால் மலம் அள்ளுபவராக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கையால் மலம் அள்ளும் தொழிலுக்கு யாரையும் பணியமர்த்தக்கூடாது என கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கையால் மலம் அள்ளும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படுவதை மத்திய, மத்திய அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது.
இந்த அருவருக்கத்தக்க நடைமுறை நாடு முழுவதும் தொடர்ந்து வருவதற்கு வேதனை தெரிவித்த நீதிபதிகள், "கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழந்தால் தொழிலாளியின் குடும்பத்திற்கு தரப்படும் இழப்பீடு 30 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது தொழிலாளிக்கு நிரந்தரமான பாதிப்பு (உடல் ரீதியாக) ஏற்பட்டால் இழப்பீடு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். பிற பாதிப்புகளுக்கு ரூ. 10 லட்சம் குறையாமல் இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார்கள்.
நாட்டின் முதல் சட்டத்துறை அமைச்சர் அம்பேத்கரின் வாக்கியத்தை மேற்கோள் காட்டி பேசிய நீதிபதி ரவிந்தர பட், "நம்முடைய போராட்டம் அதிகார செல்வத்திற்காக நடத்தப்படவில்லை. சுதந்திரத்துக்கான போராட்டம். மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான போராட்டம்" என்றார்.
இதையும் படிக்க: பாஜகவை நடுங்க வைத்த மொய்த்ராவுக்கு சிக்கல்.. கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினாரா? தொழிலதிபரின் பகீர் குற்றச்சாட்டு