பாஜகவை நடுங்க வைத்த மொய்த்ராவுக்கு சிக்கல்.. கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினாரா? தொழிலதிபரின் பகீர் குற்றச்சாட்டு
தன்னிடம் பணம் பெற்று கொண்டு, மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜகவை கேள்விக் கணைகளால் துளைத்து எடுப்பவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா. நடப்பு நாடாளுமன்றத்தில் தனது கேள்விகளின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கேள்வி கேட்க லஞ்சம்?
பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு இவர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் பணம் பெற்று கொண்டு, மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி பகீர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். ஆடம்பர பொருள்கள் கேட்டும் விடுமுறைக்காக வெளிநாட்டுக்கு ட்ரிப் செல்வதற்காக தன்னிடம் மொய்த்ரா அடிக்கடி உதவி கேட்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலரிடம் அவர் பேசியுள்ளதாகவும் தர்ஷன் ஹிராநந்தனி கூறியுள்ளார். அதுமட்டும் இன்றி பகீர் கிளப்பும் பல முக்கிய குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார். அதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
குறுகிய காலத்தில் பிரபலமாக துடித்த மொய்த்ரா?
மஹுவா மொய்த்ரா, குறுகிய காலத்தில் தேசிய அளவில் தனக்கென ஒரு பெயரை உருவாக்க விரும்பினார். பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்குவதே பிரபலம் அடைவதற்கு குறுக்கு வழி என அவரது நண்பர்களும், ஆலோசகர்களும் அவருக்கு அறிவுரை வழங்கினார்கள் என தர்ஷன் ஹிராநந்தனி குற்றம் சாட்டியுள்ளார்.
இருவரும் சமகாலத்தவர்கள் என்பதால், கௌதம் அதானியை தாக்குவதுதான் பிரதமர் மோடியை தாக்க ஒரே வழி என்று மொய்த்ரா நினைத்தார். அதுமட்டும் இன்றி, இருவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அது மொய்த்ராவுக்கு சாதகமாக போய்விட்டது. அதானி குழுமத்தை குறிவைத்து அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் நோக்கில் அவர் சில கேள்விகளை தயார் செய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான மின்னஞ்சல் ஐடியை மொய்த்ரா தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக தர்ஷன் ஹிராநந்தனி தெரிவித்துள்ளார். அதனால், அதானி தொடர்பான தகவல்களை அவருக்கு அனுப்ப முடிந்தது. அதை வைத்து, மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப முடிந்தது. கேள்விகளை நேரடியாக வழங்குவதற்காக தன்னுடைய நாடாளுமன்ற ஐடி-யையும் பாஸ்வேர்டையும் மொய்த்ரா தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக தர்ஷன் ஹிராநந்தனி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்தது ஏன்?
இதற்கு பல பேர், அவருக்கு உதவியாக இருந்தார்கள். அதானி குழுமம் தொடர்பான தகவல்களை பெறுவதற்காக ராகுல் காந்தி உட்பட பல காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் உரையாடினார். பைனான்சியல் டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ், பிபிசி மற்றும் பல சர்வதேச பத்திரிகையாளர்களை அவர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதானி குழுமத்தின் முன்னாள் ஊழியர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் உட்பட பல பேரிடம் இருந்து உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களை அவர் பெற்று கொண்டார். சில தகவல்கள் என்னுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் ஐடி-யை பயன்படுத்தி மொய்த்ராவுக்கு தகவல்களை அனுப்பினேன்.
அவர் என்னிடம் அடிக்கடி உதவிகளை கேட்டுள்ளார். விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களைப் பரிசளிப்பது, டெல்லியில் அவருக்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட பங்களாவை புதுப்பிப்பதற்கு பணம் அளித்தது, விடுமுறை நாட்களில் வெளிநாட்டுக்கு செல்வதற்கான பயணச் செலவுகள் உள்ளிட்டவற்றில் உதவி செய்ததாக தர்ஷன் ஹிராநந்தனி தெரிவித்துள்ளார்.