Supreme Court | பிச்சை எடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
இந்தியாவில் பிச்சை எடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மகாராஷ்ட்ரா அரசு பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம் என்று பிச்சை தடுப்புச் சட்டம்கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் பிச்சை எடுப்பது குற்றமென்று கூறுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் அல்ல என்று உத்தரவிட்டது. இந்த வழக்கின் மேல்முறையீடு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் எம்.ஆர்.ஷா நீதிபதிகள் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில், நீதிபதிகள் பிச்சைக்காரர்களை பொது இடங்கள் மற்றும் போக்குவரத்து சந்திப்புகளில் இருந்து விலக்க முடியாது. வறுமை என்ற ஒன்று இல்லாவிட்டால் யாரும் பிச்சை எடுக்க விரும்பமாட்டார்கள். பிச்சை எடுப்பதற்கு தடைசெய்ய ஒருபோதும் உத்தரவிட முடியாது. பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு தேவைப்படுகிறது. குறிப்பாக, போக்குவரத்து நிறுத்தங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு கல்வியையும். பிச்சைக்காரர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கவேண்டும்.
இது ஒரு சமூக பொருளாதார பிரச்சினை. தேசிய தலைநகரான டெல்லியில் தெருவில் வசிப்பவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய மற்றும் டெல்லி அரசுகள் அவசர கவனம் செலுத்த வேண்டும். பிச்சை எடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். வேண்டுமென்றால், கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைப்பவர்களுக்கு எதிராக தனியாக சட்டம்கொண்டு வரலாம். மக்களுக்கு தேவையான உணவு, பணியிடங்களை அரசு அளிக்காதபோது பிச்சை எடுப்பதை எப்படி குற்றமாக அறிவிக்க முடியும். பிச்சை எடுக்கும் நிலைக்கு ஒருவரை வறுமை தள்ளும்போது அவரை வசதியானவர்கள் கண்ணோட்டத்தில் அணுக முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பிச்சைக்காரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசிற்கும். டெல்லி அரசுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. இந்தியாவில் 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 4 லட்சத்து 13 ஆயிரத்து 670 பிச்சைக்காரர்கள் இருக்கின்றனர். இவர்களில் 2.2. லட்சம் ஆண்களும். 1.90 லட்சம் பெண்களும் அடங்குவர். இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவிலே மேற்கு வங்கத்தில்தான் ஒரு லட்சம் என்ற அளவில் அதிக பிச்சைக்காரர்கள் உள்ளனர்.