NCB to Director Ameer: ஜாபர் சாதிக் விவகாரம்; இயக்குநர் அமீரை ஆஜராக சொன்ன மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு..
ஜாபர் சாதிக், பிற சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி இயக்குநர் அமீரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி சுமார் ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக தமிழ் திரைப்பட நடிகரும், திமுக அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கடந்த 9-ஆம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், தற்போது வரை அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என்ன நடந்தது..?
கொரோனா காலத்திற்குபின் டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல், ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி வந்ததாக கூறப்படுலிறது.
இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் ஜாபர் சாதிக்கை டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதுதான் ஜாபர் சாதிக் தலைமறைவாகி இருந்தார். மேலும், சென்னையில் உள்ள அவருடைய வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறையினர், அந்த வீட்டிற்கு சீல் வைத்தனர்.
அந்த நேரத்தில்தான் ஜாபர் சாதிக், பிற சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கடந்த 9ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தினை இயக்குநர் அமீர் இயக்கி நடித்து வந்தார். அந்த படத்திற்கு இறைவன் மிகப்பெரியவர் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வரும் 2ம் தேதி இயக்குநர் அமீரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.