Karnataka Bandh: காவிரி நீர் விவகாரம்; கர்நாடக முழுவதும் நாளை பந்த் - இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம்
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முழுவதும் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடைபெற உள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதிநீரை பங்கீடுவது தொடர்பாக பல காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு காவிரி ஒழுங்காற்றுக்குழு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கர்நாடகாவில் பந்த்:
அதற்கு, அந்த மாநில விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், தற்போது வினாடிக்க 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கும் கர்நாடகாவில் கன்னட அமைப்புகளும், அந்த மாநில விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு மாநிலம் தழுவிய பந்த்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் உள்ள முக்கிய விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் ஆகியோர் இந்த மாநிலம் தழுவிய பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த பந்த் காரணமாக அந்த மாநிலத்தில் போக்குவரத்து நாளை மிக கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பந்த் நடைபெற உள்ளது.
போக்குவரத்து பாதிப்பு, கடைகள் அடைப்பு:
மாநிலம் தழுவிய இந்த பந்த் காரணமாக நாளை அந்த மாநிலத்தில் உள்ள கடைகள், முக்கிய வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை மூடப்பட உள்ளது. மேலும், இந்த போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் பொதுப்போக்குவரத்தும் செயல்படாது என்றே கருதப்படுகிறது.
போக்குவரத்து வசதிகள் இல்லாததால் நாளை அந்த மாநிலத்தில் பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட உள்ளது. ஐ.டி. உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
கூடுதல் பாதுகாப்பு:
மாநிலம் தழுவிய இந்த பந்த் காரணமாக எந்த அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்று மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் யூபர், ஓலா உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஓலா, யூபர் நயன்டஹல்லி – டவுன்ஹால் வரை பேரணி நடத்த உள்ளனர். இந்த பந்திற்கு சுமார் 1900 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கன்னட ஒக்குடா அமைப்பின் தலைவர் வாட்டல் நாகராஜ் தெரிவித்துள்ளார். பொதுப்போக்குவரத்து, தனியார் சேவைகள் நாளை பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து பேருந்துகள் ரத்து:
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதை வலியுறுத்தி ஏற்கனவே கடந்த செவ்வாய்கிழமை மாநிலம் முழுவதும் பந்த் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இடையே பல ஆண்டுகாலமாக நடக்கும் காவிரி நதிநீர் விவகாரத்தில் தொடர் பிரச்சினை நீடிப்பதால், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பந்த் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்கு இயக்கப்படும் பேருந்துகளும், சரக்கு வாகனங்களும் நாளை இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.