Ayodhya Ram Mandir: அயோத்திக்கு வந்து சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் - வைரலாகும் புகைப்படங்கள்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறக்கப்படுகிறது.
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் பணிகளை மேற்பார்வையிட காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி கருவறையில் நிறுவ உள்ளார். பிற்பகல் 12.20 மணி தொடங்கி 1 மணிக்குள் இந்த ராமர் கோயில் திறப்பானது நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் நேற்றே அயோத்திக்கு வருகை தந்து ராமர் கோயில் திறப்பு தொடர்பான தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு பல மாநிலங்கள் பொது விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மலர்களாலும், சிறப்பு விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் கோயில் வெளிப்புற வீடியோ வெளியாகி இந்திய மக்களை வெகுவாக கவர்ந்தது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிலும் ராமர் கோயில் திறப்பு விழா களைகட்டியுள்ளது. இதனிடையே இந்த கோயில் கட்டுமானத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் தற்போதைய சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளார். இவரின் மேற்பார்வையில் தான் ராமர் கோயில் திறப்புக்கான பண்டிதர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பூமி பூஜை நடந்த அன்று கருங்காலி மரத்தில் நவரத்தினம் பதித்த சங்கு, காஞ்சிபுரத்தில் இருந்து 2 செங்கல், ஐந்து தங்க காசுகள், சகல நன்மை தருகிற தாமரை பட்டயம் ஆகியவற்றை அனுப்பியிருந்தார். இதனிடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே சங்கராச்சாரியர்கள் மேற்கொள்ளும் விஜய யாத்திரைக்குச் சென்றுள்ள ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று ஹைதராபாத்தில் இருந்து அயோத்தி வந்து ராமர் கோயிலில் சிலை அமைக்கும் இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
அங்கு பூஜை நடைபெறும் இடத்துக்கு வந்த அவர் ஆகம விதிப்படி எல்லாம் நடைபெறுகிறதா என கேட்டறிந்தார். சுமார் 3 மணி கோயிலில் இருந்த அவர், கருவறையில் வைக்கப்பட்ட ராமரை தரிசனம் செய்தார். பின்னர் தான் வந்த சிறப்பு விமானத்திலேயே ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி விஜய யாத்திரைக்காக ஹைதராபாத் புறப்பட்டு சென்றார். இன்று 10 ஆயிரத்துக்கும் அதிகமான முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்னொரு நாள் வந்து அயோத்தியில் தரிசனம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.