Lingayat Mutt : லிங்காயத் மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி காலமானார்
கர்நாடகாவின் லிங்காயத் மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி காலமானார். அவருக்கு வயது 81.
கர்நாடகாவின் லிங்காயத் மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி காலமானார். அவருக்கு வயது 81. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக ஸ்ரீ யோகாசிரமா ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சித்தேஸ்வர் மறைவையடுத்து உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியோர்கள் என பலரும் சித்தேஸ்வர் மறைவை ஒட்டி தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
மறைந்த சித்தேஸ்வர் சுவாமிகளின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று கர்நாடகா முதல்வர் பொம்மை அறிவித்துள்ளார்.
சித்தேஸ்வர் சுவாமிஜியின் இறுதிச் சடங்கு நாளை (செவ்வாய்க் கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் என துணை ஆணையர் விஜய் மஹந்தேஷ் தெரிவித்தார்.
சித்தேஸ்வர் சுவாமிஜி மிகச் சிறந்த சொற்பொழிவாராக மக்களால் அறியப்பட்டவர். அவரை கர்நாடகா, மகாராஷ்டிரா மக்கள் மிகவும் நேசித்தனர். அவருடைய சொந்த ஊர் விஜயபுரா மாவட்டம் பிஜராகி. அவருக்கு கன்னடம், மராட்டி, ஆங்கிலம், சமஸ்கிருதம், உருது ஆகிய மொழிகள் கைவந்த கலை. அவர் தனது சொற்பொழிவின் போது அனைத்து மத புனித நூல்களில் இருந்து மேற்கோள்காட்டி பேசும் திறன் படைத்தவர். ஸ்ரீ பசவேஸ்வராவின் காயக தசோஹ கொள்கையை அவர் தனது சொற்பொழிவுகள் வாயிலாக எளிய மக்களிடமும் கொண்டு சேர்த்தார்.
கர்நாடகாவில் ஒரு பிரிவினர் லிங்காயத் என்ற பெயரில் தனி வழிப்பாட்டு முறையை பின்பற்றுகின்றனர். லிங்காயத் பிரிவை 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் என்பவர் தோற்றுவித்தார். லிங்காயத்துகள் தங்களை வீர சைவர்கள் என்று அழைத்து கொள்வர். லிங்காயத்தைத் தனிமதமாக அறிவிக்கக் கோரி நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சட்டப்பேரவை தேர்தல் தொடங்கி மக்களவை தேர்தல் வரை எல்லா தேர்தல்களிலும் லிங்காயத் சமூகத்தினரின் வாக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.
கர்நாடக மாநிலம் முழுவதும் 500 மடங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை லிங்காயத்து மடங்கள். அதற்பின்னர் வொக்கலிகர்களின் மடங்கள் உள்ளன. தேர்தல் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய காலங்களில் கட்சி பாரபட்சமின்றி பலரும் மடங்களுக்கு செல்வது வழக்கம். மாநிலத்தில் உள்ள மடங்கள் மிகவும் பலம் மிக்கவை. அதிகப்படியாக மக்கள் பின்தொடர்வதாலும், ஒவ்வொரு துணை பிரிவிலும் மத்திய இடம் பிடிப்பதாலும் நேரடியாக அரசியலில் ஈடுபடுகின்றன. லிங்காயத்து அமைப்பான அனைத்திந்திய வீரசைவ மகாசபை 22 மாநிலங்களில் செயல்படுகிறது. குறிப்பாக லிங்காயத்துகள் அதிகம் உள்ள வடக்கு கர்நாடகாவில் அதிகமாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





















