Aparna | ஷெர்னியின் ரியல் நாயகி அபர்ணா IFS: இதுதான் உண்மைக்கதை!
புலியை முறத்தால் விரட்டிய பெண்கள் குறித்து நாம் படித்திருப்போம், ஆனால் கிராமவாசிகளை கொன்ற புலியை விரட்ட முயற்சித்த வனத்துறை அதிகாரி அபர்னாவின் வாழ்கையை படமாக பதிவு செய்கிறது வித்யாபாலனின் ஷெர்னி திரைப்படம்
நடிகை வித்யா பாலன் எப்போதும் வித்தியாசமான கதைகளங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்கை வரலாற்றை பேசும் ’தி டர்டி பிக்சர்ஸ்’’ படம் வித்யா பாலனின் நடிப்பு திறமையை வெளிப்படுத்த நல்ல கதைக்களமாக அமைந்தது. தற்போது அந்த வரிசையில் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள ஷெர்னி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வித்யா பாலனுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது. வன விலங்குகள் குறித்தும், வனம் குறித்தும் வன அதிகாரி பார்வையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அபர்ணா என்ற அதிகாரியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது.
யார் இந்த அபர்ணா?
இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஆகிய பணிகளை போன்றே ஐ.எஃப்.எஸ் (இந்திய வனப்பணி) என்ற பணியும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வனங்களையும் வன உயிரினங்களை பாதுகாக்கவும் நிர்வகிக்கவும் கட்டமைக்கப்பட்ட பணிகளாகும். சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்குபெறும் பெண்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் அவர்களின் பெரும்பாலோனாரின் விருப்பம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளில் சேர்வதாகவே உள்ளது. இந்திய வனப்பகுதிகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஐ.எஃப்.எஸ் பணிக்கு செல்ல சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதும் பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. இதன் காரணமாக இந்திய வனப்பணி முழுவதும் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. 1980-களுக்கு பிறகுதான் வனத்துறை பணிகளில் பெண்கள் பணியமர்த்தபட்டு வருகின்றனர். தற்போது வனத்துறை பணிகளில் 284 பெண் அதிகாரிகளும் 5000-க்கும் அதிகமான பெண் களப்பணியாளர்களும் இருந்து வருகின்றனர். தொடர்ந்து ஆண்கள் மட்டுமே கோலோச்சி வரும் இத்துறையில் இந்திய வனப்பணி அதிகாரியாக சேர்ந்து சத்தமே இன்றி சாதித்து இருக்கிறார் அபர்ணா ஐ.எஃப்.எஸ்.
மகாராஷ்டிர மாநில வனத்துறையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் அபர்ணா, ’அவ்னி’’ என்ற பெண் புலி 13 பேரை அடித்து கொன்றபோது அந்த புலியை மீண்டும் வனப்பகுதிக்கு துரத்தி அனுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டவர்.
மகாராஷ்டிராவில் உள்ள பந்தர்கவுடா வனப்பகுதியில் மனிதர்களுக்கும் வன விலங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க பெண் வனக்காவலர்கள் குழுக்களை உருவாக்கி, வனத்திற்கு அருகாமையில் வசிக்கும் கிராம மக்களோடு தொடர்பில் இருக்கும்படி செய்தார். இதன் காரணமாக 24 மணி நேரமும் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து, வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் கட்டுப்படுத்த முடிந்தது.
மகாராஷ்டிராவில் பணியமர்த்தப்படுவதற்கு முன்பு மத்திய வனச்சரகத்திற்கு உட்பட்ட அசாம் மாநிலத்தில் உள்ள காண்டாமிருகங்களின் சரணாலயமான காசிரங்கா தேசிய பூங்காவின் பொறுப்பு அதிகாரியாகவும் அபர்ணா பணியாற்றி உள்ளார்.
காண்டாமிருக வேட்டையை தடுத்த அபர்ணா
உலக அளவில் அதிகம் வேட்டையாடப்படும் உயிரினங்களின் பட்டியலில் காண்டாமிருகங்கள் இருந்த நிலையில், அபர்ணா வனத்துறை பொறுப்பு அதிகாரியாக இருந்தபோது காசிரங்கா தேசிய பூங்காவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. காண்டாமிருக வேட்டையாடுதலை தடுக்க இவர் மேற்கொண்ட முயற்சிகள் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை உயர பெரிதும் கைக்கொடுத்தன. சட்டவிரோத மீன்பிடித்தலை கட்டுப்படுத்திய இவர். இப்பகுதியில் நெகிழி பயன்படுத்தவும் தடை விதித்தார்.