தாய்மொழி வழிக்கல்வி.. டி.வி. மெக்கானிக் மகள்..! தடைகளை உடைத்து இந்திய போர் விமானியான முதல் இஸ்லாமிய பெண்..!
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு பெண், உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இந்திய விமான படையின் விமானியாவது இதுவே முதல்முறை.
டி.வி. மெக்கானிக் மகள்:
உத்தர பிரதேசம் மிர்சாபூரைச் சேர்ந்த டிவி மெக்கானிக்கின் மகள் சானியா மிர்சா, இந்திய விமானப்படையில் போர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு பெண், உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இந்திய விமான படையின் விமானியாவது இதுவே முதல்முறை.
மிர்சாபூர் தேஹத் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜசோவர் கிராமத்தில் வசித்து வருகிறார் சானியா மிர்சா. தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். தன்னுடைய சொந்த மாவட்டத்திற்கு மட்டுமின்றி மாநிலம் மற்றும் நாட்டிற்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.
ஆங்கில மீடியம் இல்லாத கல்வி:
இந்தி வழி கல்வியில் படித்த அவர், விமானியாக தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசுகையில், "ஹிந்தி மீடியம் படிக்கும் மாணவர்களும் உறுதியுடன் இருந்தால் வெற்றி பெறலாம். புனே கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் டிசம்பர் 27 ஆம் தேதி அவர் இணைகிறார். எனது பெற்றோரும், செஞ்சுரியன் டிஃபென்ஸ் அகாடமியும்தான் என்னுடை வெற்றிக்கு காரணம்.
தேசிய பாதுகாப்பு அகாடமி 2022 தேர்வில் போர் விமானிகளில் பெண்களுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் முயற்சியில் என்னால் சீட்டை பெற முடியவில்லை. ஆனால் எனது இரண்டாவது முயற்சியில் எனக்கு இடம் கிடைத்துள்ளது" என்றார்.
ரோல் மாடல்:
பெற்றோரும் கிராம மக்களும் அவரைப் பார்த்து பெருமிதம் கொண்டுள்ளனர். இதுகுறித்து சானியாவின் தந்தை ஷாஹித் அலி கூறுகையில், "நாட்டின் முதல் பெண் போர் விமானி அவ்னி சதுர்வேதியை தனது முன்மாதிரியாக சானியா மிர்சா கருதுகிறார். ஆரம்பத்திலிருந்தே சானியா அவரைப் போலவே இருக்க விரும்பினார். போர் விமானியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் இரண்டாவது பெண் சானியா.
அவர் கிராமத்தில் உள்ள பண்டிட் சிந்தாமணி துபே இன்டர் கல்லூரியில் ஆரம்ப கல்வி முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்தார். அதன் பிறகு, அவர் நகரில் உள்ள குருநானக் பெண்கள் கல்லூரிக்கு சென்றார். 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர். செஞ்சுரியன் டிஃபென்ஸ் அகாடமியில் சேர்ந்து நுழைவு தேர்வுக்கு தயாராக தொடங்கினார்" என்றார்.
ஊருக்கே பெருமை:
சானியா குறித்து பேசிய அவரின் தாய் தபசும் மிர்சா, "எங்கள் மகள் எங்களையும் ஒட்டுமொத்த கிராமத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார். முதல் போர் விமானி ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றியுள்ளார். அவர் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் அவர்களின் கனவுகளைப் பின்பற்றத் தூண்டினார்" என்றார்.
தேசிய பாதுகாப்பு அகாடமி 2022 தேர்வில், ஆண் மற்றும் பெண் உட்பட மொத்தம் 400 இடங்கள் இருந்தன. பெண்களுக்கு மொத்தமாக 19 இடங்களும், அதில் போர் விமானி பிரவில் இரண்டு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. இந்த இரண்டு இடங்களில், சானியா தனது திறமையின் மூலம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.