Sabarimala Temple : கட்டுக்கடங்காத கூட்டம்.. இதெல்லாம் காரணம்.. சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு....
கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டதால் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. நாளுக்கு நாள் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கேரள மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவது வழக்கம். சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும், கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
திரளான பக்தர்கள்
கட்டுக்கடங்காத கூட்டம் சபரிமலைக்கு வருவதால் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதில் பல்வேறு சீரமங்களை சந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 67 ஆயிரம் பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்திருந்தனர். இதுபோக உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் திரண்டர்.
திணறிய பக்தர்கள்
இதனால் சபரிமலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்தனர். இதனால் சபரிமலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தரிசன நேரம் மாற்றம்
இதற்கிடையே சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன நேரம் அதிகரிப்பட்டுள்ளது என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார். அதாவது வழக்கமாக இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். தற்போது கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிக்கப்பட்டு 11:30 மணிக்கு நடை அடைக்கப்படும் எனக் கூறினார்.
ஏற்கனவே தரிசன நேரம் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் அரை மணி நேரம் கூடுதல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதாவது 24 மணி நேரத் தில் 18 அரை மணி நேரம் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
TN Rain Alert: அடுத்த 3 மணிநேரம்..! 33 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை..! யாருக்கெல்லாம் விடுமுறை?