Sabarimala : ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு... அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்
ஒவ்வொரு தமிழ் மாதம் தொடங்கிய நாள் முதல் 5 நாட்கள் வரை சபரிமலை ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படுவது வழக்கம்.
![Sabarimala : ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு... அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம் sabarimala ayyappan temple open for aani month pooja Sabarimala : ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு... அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/14/a619c14c0c6434ddbb0f057a6c5a2063_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் ஒரு மண்டலம் விரதமிருந்து இருமுடிக்கட்டி பெருவழி(காட்டுப்பாதை வழி), சிறுவழி ஆகிய பாதைகள் வழியே சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். பிற கோயில்கள் போல சபரிமலை ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. ஒவ்வொரு தமிழ் மாதம் தொடங்கிய நாள் முதல் 5 நாட்கள் வரை சபரிமலை ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படுவது வழக்கம். அதன்படி வைகாசி கடைசி நாளான இன்று நடை திறக்கப்பட்டு ஆனி மாத பூஜை நடத்தப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் தெரிவித்திருந்தது.
இதற்கு முன்பாக கடந்த ஜூன் 10 ஆம் தேதி பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அன்று இரவு 10.30 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இதன்பின் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், வழக்கம்போல் இணையத்தள முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் நடை ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால், இந்த 5 நாட்களில் சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். கோயிலுக்கு தரிசனம் செய்ய முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன் கோவிட் நெகடிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டியது கட்டாயம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)