Sabarimala: ”சாமியே சரணம் ஐயப்பா” - சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்.. குவிந்த பக்தர்கள்..!
கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது.
சபரிமலை சீசன்
கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பன்றும் நடை திறக்கப்பட்டு சில நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுபவர். அதேசமயம் கார்த்திகை, மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பதால் அங்கு மண்டல பூஜை மற்று மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.
இந்த 2 மாதங்களில் மொத்தம் 41 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும். மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் குறைவான அளவே பக்தர்கள் வருகை தந்தனர். ஆனால் நடப்பாண்டு எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை திருவாங்கூர் தேவஸ்தானமும், கேரள அரசும் செய்து வருகிறது.
மகர ஜோதி தரிசனம்
மண்டல பூஜை முடிந்து டிசம்பர் 30 ஆம் தேதி சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர். கிட்டதட்ட 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் அளவுக்கு எங்கு திரும்பினாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. இந்த காலக்கட்டத்தின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி முன்னிலையில் சுத்தகிரியை பூஜை நடைபெற்றது. முதல் நாளில் பிரசாத சுத்தி பூஜை, வாஸ்து ஹோமம், புண்ணியாகம், வாஸ்து பலி, ரக்சா கலச பூஜை ஆகியவையும், 2ஆம் நாளான நேற்று சது சுத்தி, தார மற்றும் பஞ்சகம் பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து இன்று அதிகாலை 2.46 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகர சங்கரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேசமயம் மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் 3 சந்தன பெட்டிகளில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு இன்று மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.
அங்கு சாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படும். அந்த சமயத்தில் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவார். இதனை காணும்போது சபரிமலையே சரண கோஷத்தில் மூழ்கும். மகர ஜோதி தரிசன நாளில் பக்தர்கள் கூட்டத்தை குறைக்கும் பொருட்டு சில நாட்களுக்கு முன்பு ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்பட்டது. அதேசமயம் முன்பதிவு ஜனவரி 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.