சபரிமலை ஐயப்பன் கோயில்: தரிசனம், தங்குமிடம் முன்பதிவு இன்று தொடக்கம்! பேருந்து வசதி, முழு விவரம் இதோ!
மண்டல, மகரவிளக்கு யாத்திரைக்கான தரிசன முன்பதிவு அண்மையில் தொடங்கிய நிலையில், பூஜைகள் மற்றும் தங்குமிட முன்பதிவு வலைதளத்தில் இன்று முதல் தொடங்குகிறது.

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல, மகரவிளக்கு யாத்திரை இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், பூஜைகள் மற்றும் சன்னிதானத்தில் தங்குமிடத்தை பக்தா்கள் இணையவழியில் இன்று புதன்கிழமை முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருவிதாங்கூா் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல, மகரவிளக்கு யாத்திரைக்கான தரிசன முன்பதிவு அண்மையில் தொடங்கிய நிலையில், பூஜைகள் மற்றும் தங்குமிட முன்பதிவு வலைதளத்தில் இன்று முதல் தொடங்குகிறது. சன்னிதானம் வளாகத்தில் தங்குவதற்கு பக்தா்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வரும் 17-ஆம் தேதி தொடங்கும் இரண்டு மாத கால மண்டல, மகரவிளக்கு யாத்திரையின்போது, லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தா்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. நடப்பாண்டின் மண்டல பூஜை டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றிரவு கோயில் நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக 30-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். நடப்பு யாத்திரையின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறும்.
தொடா்ந்து, 20-ஆம் தேதி பந்தளம் அரச குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்துக்குப் பின் கோயில் நடை அடைக்கப்படும். இந்த யாத்திரையின்போது பக்தா்கள் சிரமமின்றி பூஜைகளில் பங்கேற்கவும், தங்குவதற்கும் வசதியாகவே இந்த இணையவழி முன்பதிவு வசதியை திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 20 ஆயிரம் பக்தர்களுக்கும் என ஒரு நாளைக்கு மொத்தம் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் பூஜைகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று 5ம் தேதி முதல் தொடங்குகிறது. பூஜைகளுக்கும், அறைகளுக்கும் www.onlinetdb.com என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.





















