"தன்னலமற்ற அறிவுஜீவிகள்" கம்யூனிஸ்டுகளுக்கு பாராட்டா? ஷாக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்
"சிலர், தங்களை தாங்களே WOKE என்றும் கலாசார மார்க்சியவாதிகள் என்றும் அழைத்து கொள்கின்றனர். இவர்கள், இந்தியா தனித்து நிற்பதை விரும்பவில்லை" என ஆர்.எஸ்.எஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, கடந்த 1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்டது. எனவே, ஆண்டுதோறும் அமைப்பு தொடங்கப்பட்ட விஜயதசமி நாளன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்கள், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள்.
ஷாக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்:
அந்த வகையில், இந்தாண்டு நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "சிலர், தங்களை தாங்களே WOKE என்றும் கலாசார மார்க்சியவாதிகள் என்றும் அழைத்து கொள்கின்றனர். இவர்கள், இந்தியா தனித்து நிற்பதை விரும்பவில்லை" என்றார்.
(Woke என்பது அமெரிக்காவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வார்த்தை. பாகுபாட்டுக்கு எதிராகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பவர்கள் என்பது பொருள். குறிப்பாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்களை பாதிக்கும் அரசியல், சமூக பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள்)
திடீரென கம்யூனிஸ்டுகளை புகழ்ந்து பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர், "சங்கிகளாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, சுயநலமில்லாத அறிவுஜீவிகளாக செயல்படுபவர்களை WOKE கலாசாரவாதிகளும் கலாசார மார்க்சியவாதிகளும் எதிர்க்கிறார்கள். இம்மாதிரியான நபர்கள், சமூகத்தில் பாகுபாடு மற்றும் பிரிவினையை உருவாக்க முயற்சிக்கின்றனர். 1920 களுக்கு பிறகு, இவர்கள் மார்க்ஸையே மறந்துவிட்டார்கள்" என்றார்.
கம்யூனிஸ்டுகளுக்கு பாராட்டா?
தொடர்ந்து பேசிய அவர், "இன்றைய சூழ்நிலையில், நமது விழுமியங்களில் நிலைத்து நின்று மாற்றத்தை கொண்டு வந்தால், அது உலகத்திற்கு வழி வகுக்கும். இப்போது அதை செய்ய ஆரம்பித்துள்ளோம். ஆனால், உலகிலும் இந்தியாவிலும் கூட இந்தியா (சொந்த காலில்) நிற்பதை விரும்பாத சிலர் இருக்கிறார்கள்.
எனவே சமூகத்தில் பாகுபாடுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட கூட்டை எப்படி உடைப்பது, பிரிவினை மற்றும் மோதலை உருவாக்குவது எப்படி என யோசித்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த அழிவுகரமான, அனைத்தையும் விழுங்கும் சக்திகள் தங்களை கலாச்சார மார்க்சிஸ்டுகள் என்றும் WOKE என்றும் அழைத்து கொள்கிறார்கள். ஆனால், இவர்கள் 1920களில் இருந்து மார்க்ஸை மறந்துவிட்டார்கள். உலகில் உள்ள ஒழுங்குமுறையைும் ஒழுக்கத்தையும் நன்மையையும் கலாச்சாரத்தையும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் இவர்கள் எதிர்க்கின்றனர்.
ஒரு சில மனிதர்கள், மனித இனத்தை முழுமையாக கட்டுபடுத்துவதற்காக இவர்களை ஊக்குவிக்கிறார்கள். அராஜகம் செய்கிறார்கள். கண்மூடித்தனத்தை பரப்புகிறார்கள். ஊடகங்கள் மற்றும் கல்வித்துறையின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வது, கல்வி, கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூகச் சூழலில் குழப்பத்தை ஏற்படுத்துவது, ஊழலில் ஈடுபடுவதே இவர்களின் செயல்திட்டமாகும்.
பயம், குழப்பம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றின் சுழலை உருவாக்க இத்தகைய சூழல் உதவுகிறது. பிளவுப்பட்ட சமூகமும் பரஸ்பர மோதல்களிலும் குழப்பங்களிலும் சிக்கித் தவிக்கும் ஒரு சமூகமும் பலவீனமாகி, எங்கும் தங்கள் ஆதிக்கத்தைத் தேடும் இந்த நாசகார சக்திகளுக்கு எளிதாகவும் அறியாமலும் இரையாகிவிடுகிறது" என்றார்.