"ஆட்டம் ஆரம்பம்" முதல் தேர்தலிலேயே ராகுல் காந்தியின் சாதனையை ஊதித்தள்ளிய பிரியங்கா காந்தி!
போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ராகுல் காந்தியின் சாதனையை முறியடித்து வெற்றி வாகை சூட உள்ளார் பிரியங்கா காந்தி.
வயநாடு மக்களவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பாதையை நோக்கி நடைபோட்டு வருகிறார் பிரியங்கா காந்தி. ராகுல் காந்தி வாங்கிய வாக்குகளை காட்டிலும் அதிக அளவில் பிரயங்கா காந்தி பெற்றுள்ளார்.
முதல் தேர்தலிலேயே அசத்திய பிரியங்கா காந்தி:
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் பொதுத்தேர்தலை தவிர்த்து பல்வேறு சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி முதல்முறையாக நேரடியாக மக்கள் பிரதிநிதி பதவிக்காக போட்டியிட்டிருந்தார். முன்னதாக, கடந்த பொதுத்தேர்தலின் போது வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
ராகுல் காந்தியின் சாதனை முறியடிப்பு:
இரண்டாவது தொகுதியை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்ததை அடுத்து, வயநாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின் போது, அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியுற்றபோது, வயநாடு தொகுதிதான் ராகுல் காந்திக்கு வெற்றியை பரிசளித்து நாடாளுமன்றத்திற்கு செல்ல வாய்ப்பளித்தது.
அதேபாணியில், பிரியங்கா காந்திக்கு வயநாடு மக்கள் வெற்றியை பரிசாக அளிப்பார்களை என்ற கேள்வி எழுந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. 6 லட்சத்து 22 ஆயிரத்து 338 வாக்குகள் பெற்றுள்ள பிரியங்கா காந்தி, வெற்றிப்பாதையை நோக்கி நடைபோட்டு வருகிறார். 4 லட்சத்து 10 ஆயிரத்து 931 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இது, கடந்த பொதுத் தேர்தலில் ராகுல் காந்தி பெற்ற வாக்குகளை காட்டிலும் அதிகம். அந்த தேர்தலில், 6 லட்சத்து 47 ஆயிரத்து 445 வாக்குகளை பெற்ற ராகுல் காந்தி, 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எனவே, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ராகுல் காந்தியின் சாதனையை முறியடித்து வெற்றி வாகை சூட உள்ளார் பிரியங்கா காந்தி.
இதையும் படிக்க: Kalaignar Kanavu Illam Scheme: சொந்த வீடு கட்டணுமா..! ரூ.3.5 லட்சம் அள்ளி கொடுக்கும் தமிழக அரசு, செய்ய வேண்டியது என்ன?