![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Presidential Election 2022: குடியரசுத் தலைவர் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!
Presidential Election 2022 Date: தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதி உடன் நிறைவடைகிறது
![Presidential Election 2022: குடியரசுத் தலைவர் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்! Presidential Election 2022 India Date Schedule Announced Check Polling Counting Result Dates Here Presidential Election 2022: குடியரசுத் தலைவர் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/09/e331e4fdae5d91916a50af54b5a66dc0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் ஜூன் 15ஆம் தேதி இதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் நிலையில், ஜூன் 29ஆம் தேதி முடிவடையும் என தெரிவித்துள்ளார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30 ஆம் தேதி நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜூலை 2ஆம் தேதி கடைசிநாள் என தெரிவித்துள்ளார். ஜூலை 18ஆம் தேதி பதிவு செய்யப்படும் வாக்குகள் அனைத்தும் ஜூலை 21ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும், புதிய குடியரசுத் தலைவர் வரும் ஜூலை 25ஆம் தேதி பதவி ஏற்பார் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துளார்.
எங்கெங்கு வாக்குப்பதிவு
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் குடியரசுத் தலைவருக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பிரமோத் சந்திர மோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் வழங்கும் பேனா மூலமே வாக்குப்பதிவு
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு ஏற்கப்பட வேண்டும் எனில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் வேட்பாளரை முன்மொழிய வேண்டும். நாடு முழுவதும் 776 எம்.பிக்கள் மற்றும் 4,809 எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.எல்.சிக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையம் வழங்கும் பேனா மூலம் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முடிவடையும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம்
தற்போதைய குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் மற்றும் துணைக் குடியரசுத் தலைவராக உள்ள வெங்கைய நாயுடு ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சார்பில் யார் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக வேட்பாளருக்கு நவீன்பட்நாயக், ஜெகன் மோகன் ஆதரவு ?
சென்ற தேர்தலில் ராம்நாத் கோவிந்த் எளிதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்களின் பலம் குறைந்துள்ள நிலையில் முன்பை காட்டிலும் பாஜக எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலில் ஒரிசாவில் பிஜூ ஜனதாதளம் மற்றும் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)