Srilankan President Visit to India: இந்தியாவுக்கு வரும் அதிபர் ரணில் விக்ரமசிங்க.. இந்த முறையாவது ஏதேனும் ‘முன்னேற்றம்’ ஏற்படுமா?
இரண்டு நாள் பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு வருகை தருகிறார். இந்த பயணத்தில் தமிழர்கள் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க அரசு முறை பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தருகிறார். ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதி இந்தியாவிற்கு வரும் ரணில் விக்ரமசிங்க தமிழர்கள் குறித்து பிரச்சனை, இலங்கையில் இந்தியாவின் முதலீடு அதிகரிப்பது மற்றும் இந்தியா - இலங்கை இடையே பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வருகையின் போது, அங்குள்ள சிறுபான்மை தமிழ் மக்களுக்கு உரிமை வழங்குவது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இலங்கை அரசியலமைப்பில் 13வது திருத்தத்தை அமல்படுத்த, இந்தியா மீண்டும் வலியுறுத்த திட்டமிட்டுள்ளது. ஆறு முறை பிரதமராக இருந்த போது பல முறை இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தருகிறார். அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசுகிறார். நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
இந்தியாவிற்கு வருகை தருவதற்கு முன்னதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் முன்னணி தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார். அப்போது முன்னாள் விடுதலை புலிகளின் மறுவாழ்வு குறித்தும் 13 வது திருத்தச் சட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ஏபிபி நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், இலங்கை அதிபர் தனது இந்திய பயணத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்த கூட்டம் நடத்தியதாகவும், 13 வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவே இந்தியா விரும்புவதாகவும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா வந்தபோதும் இந்தப் பிரச்சினையை குறித்து பேசப்பட்டது. இருப்பினும், அவரது அரசாங்கத்தின் கீழ் இந்த விவகாரம் எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை.
தமிழ் கட்சிகளுடனான ரணில் விக்ரமசிங்க சந்திப்பின் போது, அங்குள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விக்ரமசிங்க ஒரு விரிவான திட்டத்தை முன்வைத்து, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசியல் உள்நோக்கம் இன்றித் தீர்வு காணப்படும் என்றும், மாகாண சபைகளின் செயற்பாடுகள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் தொடர்பான பல்வேறு சட்டதிட்டங்கள் குறித்தும் விளக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்தியாவின் அதானி குழுமம் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் சில முக்கிய கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளது, இதில் கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையம், இரண்டு காற்றாலை மின் உற்பத்தி மையம் மன்னார் மற்றும் பூனேரியில் கட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து மார்ச் மாதத்தில் 3 பில்லியன் டாலர் அளவு இலங்கை கடன் பெற்றது. இந்த கடன் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இப்படி இருக்கும் சூழலில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய பயணம் மேற்கொள்கிறார்.
இலங்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவும் உதவி புரிந்து வருகிறது. வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ராவின் இலங்கை பயணத்தின் போது இது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அண்மையில், டாடா குழுமத்தின் குழு ஒன்று முதலீட்டு வாய்ப்புகளை ஆராய கொழும்புக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், கடல்சார் விஷயங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் தனது நிலையை வலுப்படுத்துவது போன்ற அதன் திட்டங்கள் சவாலாக மாறக்கூடும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி சமீபத்தில் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார், அங்கு இரு தரப்பினரும் உயர் தரமான பெல்ட் அண்ட் ரோடு ஒத்துழைப்பை நோக்கி செயல்பட உறுதியளித்தனர். இந்த திட்டம் இலங்கையில் அமலுக்கு வந்தால் இந்தியாவை சீனா உளவு பார்ப்பது மிகவும் எளிதாகிவுடும் என இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் விஷன் சாகர் கொள்கைகளில் இலங்கை முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை வலுப்படுத்தவும் பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராயும் எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் இந்திய கடற்படையின் ‘வாகீர்’ நீர்மூழ்கிக் கப்பல் நான்கு நாள் பயணமாக இலங்கைக்கு சென்றது. இதுதவிர ஐஎன்எஸ் டெல்லி, சுகன்யா, கில்தான், சாவித்ரி ஆகிய கப்பல்களும் கொழும்புக்கு கூட்டுப் பயிற்சிக்காக சென்றது. கடந்த ஆண்டு இறுதியில் சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டதை குறித்து இந்தியாவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. கடந்த டிசம்பரில், இந்திய கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார் இலங்கைக்கு சென்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுவரை, டெல்லி இலங்கைக்கு சுமார் 4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.