வாக்னர் படை கிளர்ச்சியை கையாண்டது எப்படி? ரஷிய அதிபர் புதினுக்கு போன் போட்டு கேட்ட பிரதமர் மோடி..!
உக்ரைனில் நிலவி வரும் சூழல் குறித்தும், வாக்னர் கூலிப்படை கிளர்ச்சி குறித்தும் ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
கடந்த 16 மாதங்களாக, உக்ரைன் போர் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதில் திடீர் திருப்பமாக ரஷியா ஆதரவு கூலிப்படை ரஷியா ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியது. ரஷிய தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்து செல்ல, தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படைக்கு அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உத்தரவிட்டார்.
புதினுக்கு போன் போட்டு பேசிய பிரதமர் மோடி:
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்தரவு பிறப்பித்த வேகத்துடனேயே அதனை திரும்ப பெற்றார் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின். ரஷிய ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தற்போது பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் நிலவி வரும் சூழல் குறித்தும், வாக்னர் கூலிப்படை கிளர்ச்சி குறித்தும் ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இதுகுறித்து ரஷிய அரசு வெளியிட்ட அறிக்கையில், "கடந்த சனிக்கிழமை வாக்னர் கூலிப்படை குழுவின் கிளர்ச்சியை கையாள்வதில் ரஷிய தலைமையின் தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் கடந்த ஜூன் 24ஆம் தேதி நடந்த நிகழ்வுகள் தொடர்பாக, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ரஷிய தலைமையின் தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு மோடி புரிந்துணர்வையும் ஆதரவையும் தெரிவித்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சரியும் புதின் செல்வாக்கு:
கிளர்ச்சி ஏற்பட்ட இரவு நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில் ரஷிய அரசுக்கும் வாக்னர் கூலிப்படைக்கும் சுமூகமான தீர்வு ஏற்பட நாட்டை விட்டு செல்ல பிரிகோஜின் ஒப்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு பலனாக, அவருக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
பிரச்னை முடிவுக்கு வந்த போதிலும், உலகின் அதிகாரமிக்க தலைவரான புதினுக்கு எதிராக சொந்த நாட்டு கூலிப்படையே திரும்பியது உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால், அவரின் செல்வாக்கு சரியும் என கூறப்படுகிறது.
புதினுக்கு தலைவலியை தந்த வாக்னர் கூலிப்படை:
பிஎன்சி வாக்னர் எனப்படும் வாக்னர் கூலிப்படை, ரஷிய நாட்டின் துணை ராணுவ அமைப்பாகும். சட்டத்திற்கு அப்பாற்பட்டு வேலை செய்து வருகிறது. அடிப்படையில், இது ஒரு தனியார் ராணுவ அமைப்பாகும். கூலிப்படையினரை கொண்டு இயங்கி வருகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷிய சார்பு பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிக்கும் போது இந்த குழு முதலில் 2014இல் அடையாளம் காணப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டில், பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலேயே இந்த ரகசிய அமைப்பு இயங்கி வந்தது. இந்த குழுவில் ரஷியாவின் உயரடுக்கு படைப்பிரிவுகள் மற்றும் சிறப்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 5,000 போராளிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் போரில் வாக்னர் கூலிப்படையால் 50,000 போராளிகள் இறக்கப்பட்டுள்ளனர் என்றும் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் முக்கிய அங்கமாக வாக்னர் படை மாறியுள்ளது என்றும் ஜனவரி மாதம் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.