G20 Summit: ஜி20 உச்சி மாநாடு.. ”சிறந்த கிரகத்திற்கான ஆக்கப்பூர்வமான விவாதம்” - பிரதமர் மோடி ட்வீட்டில் பெருமிதம்
ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஜி20 மாநாட்டில் ”சிறந்த கிரகத்திற்கான ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றதாக” பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஜி20 உச்சிமாநாடு:
உலக பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட, ஜி20 கூட்டமைப்பிற்கு நடப்பாண்டு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். பிரகதி மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், உக்ரைன் போர், சர்வதேச விவகாரங்களில் சேர்ந்து செயல்படுவது போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் டெல்லி உச்சி மாநாட்டின் தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, குடியரசு தலைவர் மாளிகையில் இரவு விருந்தும் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாநாடு தொடர்பான வீடியோ ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
#WATCH | G 20 in India | "Productive discussions at the G20 Summit for a better planet," tweets Prime Minister Narendra Modi pic.twitter.com/UGrrYVXuyi
— ANI (@ANI) September 10, 2023
பிரதமர் மோடி பெருமிதம்..!
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஜி20 உச்சி மாநாட்டில் சிறந்த கிரகத்திற்கான ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றதாக” குறிப்பிட்டுள்ளார். அதோடு, 3 நிமிட விடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், ”உச்சி மாநாட்டின் நிகழ்வுகள், அங்கு உலக தலைவர்கள் கலந்துரையாடியது, பிரகடனங்கள் அறிவிக்கப்பட்டது, தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது, சர்வதேச அளவில் உயிரி வாயுக்களின் கூட்டணியை உலக தலைவர்களுடன் சேர்ந்து மோடி தொடங்கி வைத்தது, இந்தியா - மத்திய கிழக்கு நாடுகள் - ஐரோப்பா நாடுகள் இணைந்து பொருளாதார கூட்டணி அமைப்பது, குடியரசு தலைவர் மாளிகையில் வழங்கப்பட்ட இரவு விருந்து” என உச்சி மாநாட்டின் ஒரு சிறு தொகுப்பாக அந்த வீடியோ உருவாகியுள்ளது.
பிரதமர் சொன்னது என்ன?
மாநாட்டின் போது பிரதம்ர் மோடி பேசிய முக்கிய பேச்சுகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, "எனக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. எங்கள் குழுவின் கடின உழைப்பின் காரணமாக, டெல்லி ஜி20 உச்சிமாநாட்டின் தீர்மானத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இந்த பிரகடனத்தை ஏற்க வேண்டும் என முன்மொழிகிறேன். தீர்மானம், ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கிறேன். ஜி20 கூட்டமைப்பில் ஆப்ரிக்கா ஒன்றியத்தை இணைக்கும் இந்தியாவின் முன்மொழிவை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டது” உள்ளிட்ட கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.