PM Modi: தமிழ்நாட்டில் பிடித்தது மொழியா? சாப்பாடா? மனம் திறந்த பிரதமர் மோடி!
தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுமையாக உணர வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 19 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கும் முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தமிழ்நாட்டை தவிர 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
"தமிழ் மொழிக்கான மரியாதை கிடைக்க வேண்டும்”
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சியின் நேர்காணலில் அமலாக்கத்துறை, அதிமுக, பாஜக வியூகம் உள்ளிட்டவற்றை குறித்து பிரதமர் மோடி பேசினார். இதில், தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்தது மொழியா? கலாச்சாரமா? சாப்பாடா? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதலளித்த பிரதமர் மோடி, "குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், முதலில் எனக்கு பிடித்தது தமிழ் மொழி. உலகத்தின் பழமையான மொழி தமிழ். உலகத்திலேயே பழமையான மொழி தமிழ்மொழி தான் என ஐ.நா. சபையில் கூறினேன்.
தமிழின் பெருமையை உலகம் முழுமையாக உணர வேண்டும். தமிழ் மொழிக்கான மரியாதை கிடைக்க வேண்டும். ஆனால், இப்படிப்பட்ட மொழியை வைத்து அரசியல் செய்யப்படுகிறது. அரசியல் காரணங்களால் தமிழை முடக்கி வைத்துள்ளனர். இதனால், தமிழ் மொழிக்கு பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.
”காசி தமிழ் சங்கமம் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும்”
நாட்டின் பல பகுதிகளில் இருந்து காசிக்கு செல்கின்றனர். ஆனால், காசியில் படகோட்டிகள் பலரும் தமிழ் மொழி தான் பேசுகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் இருந்து தான் அதிகப்படியான பக்தர்கள் காசிக்கு செல்கின்றனர். அந்த அளவுக்கு காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது.
இதனால் தான், தமிழ்நாட்டில் காசி தமிழ் சங்கமம் நடத்த விரும்பினேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக தான் காசியில் வாழும் மக்கள் தமிழ்நாட்டின் கலாச்சாரம், கலை, இலக்கியம், உணவு முறை உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்வதற்காக தான் காசி தமிழ் சங்கமம் நடத்தப்படுகிறது. காசி தமிழ் சங்கமம் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வாக எனக்கு தெரிகிறது.
”சுதந்திரத்தின் சாட்சியை செங்கோல் தான்”
செங்கோல் பற்றிய புரிதல் இங்கு பலருக்கு இல்லை. சுதந்திரத்தின் சாட்சியை செங்கோல் தான். நேருவிடம் ஆதினங்கள் தான் செங்கோலை வழங்கினார்கள். அரசியல் மாற்றத்தின் அடையாளத்தை உணர்த்தும் வகையில் வழங்கப்பட்ட செங்கோலுக்கு மரியாதை அளிக்கப்படவில்லை.
செங்கோலை அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்தது. புனிதமான செங்கோலை வாக்கிங் ஸ்டிக் என கொச்சைப்படுத்தினார்கள். பல ஆய்வுகளுக்கு பிறகு, செங்கோலை புதிய நாடாளுமன்றத்தில் வைக்க முடிவு செய்தேன்.
குடியரசுத் தலைவர் உரையாற்ற நாடாளுமன்றத்திற்கு வரும்போது, அவருக்கு முன் செங்கோல் எடுத்து செல்லப்படும். நாட்டின் அரசியல் செயல்பாட்டின் தொடர்புடையது செங்கோல். தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை உணர்த்தும் செங்கோலை, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் புறக்கணிக்கின்றனர்” என்றார் பிரதமர் மோடி.