நாட்டுக்கு அவமானம்..அக்கிரமத்தை பொறுத்து கொள்ள முடியாது..மணிப்பூர் விவகாரத்தில் கொந்தளித்த பிரதமர் மோடி
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இது நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் குகி சோ பழங்குடியின வகுப்பை சேர்ந்த பெண்களை நிர்வாணமாக்கிய கும்பல், அவர்களை சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி நாட்டை உலுக்கி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இது நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
"மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது"
இதுகுறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வந்த நிலையில், மோடி தற்போது பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் நாட்டுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன், குற்றவாளிகள் யாரையும் தப்பிக்க விட மாட்டோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது.
இந்த ஜனநாயகக் கோயிலுக்கு (நாடாளுமன்றம்) பக்கத்தில் நான் நிற்கும்போது, என் இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்த நாகரீக தேசத்திற்கும் வெட்கக்கேடானது. ஒட்டுமொத்த நாடும் அவமானப்பட்டு விட்டது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டங்களை வலுப்படுத்துமாறு அனைத்து முதலமைச்சர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
"மனசாட்சி எங்கே போனது?"
சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் என எங்கு வேண்டுமானாலும் நடைபெற்று இருக்கட்டும். குற்றவாளி நாட்டின் எந்த மூலையிலும் சுதந்திரமாக சுத்தக்கூடாது. மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்கப்படாது" என தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. மனித குலத்தின் நல்ல குணங்களை வெறுப்பும் விஷத்தனமும் வேரோடு அழிக்கிறது. நமது மனசாட்சி எங்கே போனது? மணிப்பூரில் நிகழும் கொடூர வன்முறைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மணிப்பூர் முழுவதும் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
மணிப்பூர் வீடியோ நெஞ்சை பதற வைக்கும் வகையில் உள்ளது என காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். "மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைந்துவிட்டது. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்டத்தை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், ”மணிப்பூரில் 2 பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து முதல்வர் பீரன் சிங்கிடம் பேசி உள்ளேன். தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான முயற்சி ஒருபோது கைவிடப்படாது” என்றார்.