Viduthalai 2: ரெடியா? நாளை விடுதலை 2 ரிலீஸ்! 2024ஐ வெற்றியுடன் முடித்து தருவாரா வெற்றி மாறன்?
விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் நாளை உலகெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன். பொல்லாதவன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என தன்னுடைய அடுத்தடுத்த படங்கள மூலமாக தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வளர்ந்துள்ளார்.
விடுதலை 2 நாளை ரிலீஸ்:
இவரது இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் விடுதலை. சூரி நாயகனாக நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய டேத்தில் நடித்துள்ளார். இந்த படம் முடிவடையும்போதே, இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்புடன் முடிந்திருக்கும். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் நாளை உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. முதல் பாகமானது சூரியைச் சுற்றி கதை அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த இரண்டாம் பாகமானது விஜய் சேதுபதியை சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி, சூரி:
உரிமைகளுக்காக போராடும் இந்த படத்தில் விஜய் சேதுபதி போராளியாக நடித்துள்ளார். பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மஞ்சு வாரியர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அசுரன் படத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்த பிறகு, மீண்டும் மஞ்சுவாரியர் அவரது இயக்கத்தில் நடிக்கும் படம் இதுவாகும்.
மக்களின் உரிமைக்காக போராடும் விஜய் சேதுபதி மற்றும் அவரது குழுவினருக்கும், காவல்துறையினருக்கும் நடக்கும் மோதலே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் ஆகியோருடன் கௌதம் மேனன், அனுராக் காஷ்யப், ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படமானது ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெற்றிமாறனுடன் இணைந்து எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ராமர் எடிட்டிங் செய்துள்ளார்.
விடுதலை முதல் பாகத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த சேத்தனின் நடிப்புக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் பாகத்திலும் அவருக்கு முக்கிய காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் நடிகர்கள் இளவரசு, சரவண சுப்பையா, பாவெல் நவகீதன், பிரகாஷ் ராஜ், ரவி மரியா, வின்சென்ட் அசோகன் ஆகியோரும் நடித்துள்ளனர். 2024ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், தமிழில் வெளியாகும் மிகவும் முக்கியமான படமாக விடுதலை 2ம் பாகம் அமைந்துள்ளது.
இந்தாண்டு தமிழில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கங்குவா, இந்தியன் 2, வேட்டையன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், 2024ம் ஆண்டை கோலிவுட் வெற்றியுடன் நிறைவு செய்யுமா? என்று தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.