சாதி அரசியல், வாரிசு அரசியலில் இருந்து நாட்டைக் காப்பாற்றியுள்ளார் மோடி: அமித் ஷா புகழாரம்
பிரதமர் நரேந்திர மோடி நாட்டை சாதி அரசியல், வாரிசு அரசியலில் இருந்து காப்பாற்றியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டை சாதி அரசியல், வாரிசு அரசியலில் இருந்து காப்பாற்றியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெரிவித்துள்ளார். முன்பிருந்த அரசுகள் எல்லாம் தனது கொள்கைகளை சாதி அடிப்படையில் வகுத்தது. வாரிசு அரசியலை ஊக்குவித்தது. பட்ஜெட் ஒதுக்கீடுகளை ஏதோ ஒரு சில அமைப்பினரை சமாதானப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. ஆனால் இவை அத்தனைக்கும் பிரதமர் மோடி முடிவு கட்டியுள்ளார் என்றார்.
பெங்களூருவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா. இந்திய அரசியல் 65 ஆண்டுகளில் நிலவிய சூழலும் மோடிக்குப் பின் ஏற்பட்ட மாற்றமும் என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது, "மோடி ஆட்சி அமைந்த பின்னர் தான் இந்திய அரசியலில் சாதி அடிப்படையில் வாரிசு அடிப்படையில் எல்லாவற்றையும் அணுகுதல் மாறியுள்ளது. நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட தரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில் கொள்கைகள் வகுப்பதில்லை. எங்கள் கொள்கை எல்லாம் மக்கள் நலன் சார்ந்ததாக உள்ளது. அனைத்து மக்களின் நலனே எங்களின் இலக்கு.
அதனால் வாக்காளர்களும் கட்சியின் கொள்கையைக் கருதியும், தலைவரைக் கருதியும் வாக்களிக்க வேண்டும். ஒரு தனிநபருக்காக வாக்களிப்பதும் தவறு. ஆனால் அதேவேளையில் கட்சியையும், தலைவரையும் சேர்ந்தே ஒருங்கிணைத்து கருத்தில் கொண்டு வாக்களித்தால் நலம்.
கடந்த 75 ஆண்டுகளில் எல்லா அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளையும் மக்கள் பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோஷியலிஸ்ட்ஸ், பாஜக என எல்லா கட்சிகளின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதில் பாஜகவின் செயல்பாடு நிச்சயமாக சிறப்பாக இருக்கும்" என்றார்.
பிரதமர் மோடியின் உரை:
"ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்கள். ஊழல் தேசத்தை அரிக்கும் கரையான். ஊழலை ஒழிக்காமல் ஊழல்வாதிகளை தண்டிக்கும் மனநிலையை மக்கள் வளர்த்துக் கொள்ளாதவரை தேசம் அதன் முழுவேகத்தில் முன்னேற இயலாது. இந்த வேளையில் நான் குறிப்பிட வேண்டிய மற்றொரு சவால் வேண்டியவர்களுக்கு செய்யப்படும் சலுகை. குடும்பத்தினர், உறவினர்கள், வேண்டியவர்கள் என்று காட்டப்படும் சலுகைகளும், செய்யப்படும் சிபாரிசுகளும் பெரிய தீமை. இது உண்மையான திறமைசாலிகளின் வாய்ப்பைப் பறித்துவிடும். தகுதியும், திறமையும் கொண்டவர்களுக்கு வாய்ப்பளித்தால் தான் நமது தேசம் வளர்ச்சி காணும்" என்று பிரதமர் மோடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2024 மக்களவை தேர்ந்தல் நடைபெறவிருக்கிறது. அதனை ஒட்டி இப்போதிருந்தே பாஜக கட்சியை வலுப்படுத்த ஆரம்பித்துள்ளது. குஜராத் தேர்தல் வெற்றியில் மோடியின் அடையாளம் மீண்டும் எடுபட்ட நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடியை முன்நிறுத்தியே பாஜக பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமித் ஷா மோடியைப் பாராட்டிப் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.