Modi Trump: ”உங்க பொங்கலும் வேண்டாம், பாயாசமும் வேண்டாம்” ட்ரம்புக்கு நோ சொன்ன மோடி - எங்கு? ஏன்?
Modi Trump: அமெரிக்க வெள்ளை மாளிகையில் விருந்துக்கு அழைத்த அதிபர் ட்ரம்பின் அழைப்பை, தான் நிராகரித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Modi Trump: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழைப்பை நிராகரித்தது ஏன்? எனவும் பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.
”அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த மோடி”
ஒடிசாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற பிரதமர் மோடி, வாஷிங்டன் டிசிக்கு நீங்கள் வரவேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த அழைப்பை தான் நிராகரித்ததாக தெரிவித்தார். புவனேஷவரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ”கனடாவில் ஜி7 மாநாட்டில் பங்கேற்றபோது ட்ரம்பிடம் இருந்து அழைப்பு வந்தது. வாஷிங்டனிற்கு வந்து இரவு விருந்தில் பங்கேற்க என்னை வலியுறுத்தினார். ஆனால், புனித மகாபிரபுவின் நிலத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால், அமெரிக்காவிற்கு வர முடியாது என மரியாதையுடன் மறுத்துவிட்டேன்” என ட்ரம்பிடம் சொன்னதாக விளக்கமளித்தார்.
ட்ரம்ப் அழைப்பு, மோடி நிராகரிப்பு:
நிகழ்ச்சியில் பேசிய மோடி, “இரண்டு தினங்களுக்கு முன்பாக கனடாவில் ஜி7 மாநாட்டில் இருந்தேன். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கனடா வரை வந்துவிட்டீர்கள், அப்படியே வாஷிங்டன் வழியாக வந்தால் நாம் இருவரும் சேர்ந்து பேசியபடியே இரவு விருந்து எடுத்துக்கொண்ட பிறகு நீங்கள் உங்கள் நாட்டிற்கு திரும்பலாம் என ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். அழைப்பிற்கு நன்றி. ஆனால், மகாபிரபு (பூரி ஜெகன்நாதர்) நிலத்திற்கு செல்ல வேண்டியது மிகவும் முக்கியம் எனவே ட்ரம்பின் அழைப்பை மரியாதையுடன் நிராகரித்து விட்டேன்” என மோடி தெரிவித்தார். ஒடிஷாவில் பாஜக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமான விழாவில் பங்கேற்று மோடி இதனை தெரிவித்தார்.
மோடி நிராகரித்தது ஏன்?
நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என ட்ரம்ப் மற்றும் மோடி இருவருமே பல இடங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்தியது நான் தான் என பல இடங்களில் ட்ரம்ப் உரிமை கோரியது, மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், 37 நாடுகளுக்கு இந்திய எம்.பிக்கள் பயணித்து பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல் அந்நாட்டு ராணுவ தளபதிக்கு ட்ரம்ப் விருந்து கொடுத்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான், ட்ரம்பின் அழைப்பை நிராகரித்ததாக மோடி தெரிவித்துள்ளார். அதேநேரம், மோடிக்கு விருந்து அழைப்பு விடுத்தது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பில் எந்தவித விளக்கமும் தற்போது வரை வெளியாகவில்லை.
ரூ.18,600 கோடி திட்டங்கள்:
ஒடிஷாவில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு ஆறாவது முறையாக பிரதமர் மோடி ஒடிஷாவிற்கு வருகை தந்தார். இதில் 18 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான 105 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். ஒடிஷா விசன் ஆவணப்படத்தையும் திறந்து வைத்தார். அவர் தொடங்கி வைத்த திட்டங்களில் குடிநீர் மற்றும் நீர்ப்பாசனம், சுகாதார உள்கட்டமைப்பு, கிராமப்புற சாலைகள் மற்றும் பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.






















