நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கான தேதி அறிவிப்பு.. எப்போது தொடங்குகிறது?
மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இது தொடர்பான அறிவிப்பை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடர், வரும் டிசம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இது தொடர்பான அறிவிப்பை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
"அமிர்த காலத்தில் நடைபெறும் அமர்வில் நாடாளுிமன்ற விவகாரங்கள் மற்றும் இதர விஷயங்கள் பற்றிய விவாதங்களை எதிர்நோக்குகிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்:
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்கப்பட்ட அறிக்கையை மக்களவை நெறிமுறைகள் குழு, வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ளது. மக்களவை உறுப்பினராக மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்ய, குழு பரிந்துரை செய்துள்ளது.
குறிப்பிட்ட அந்த அறிக்கையை நாடாளுமன்றம் ஏற்று கொண்டால்தான், மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய முடியும். இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், ஆதார சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டங்களை கொண்டு வரும் வகையிலான மசோதாக்கள் வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது. புதிய சடடங்கள் தொடர்பான அறிக்கையை உள்துறை அமைச்சகத்துக்கான நிலைக்குழு ஏற்கனவே, ஏற்று கொண்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்:
கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து நாடாளுமன்றத்தை முடக்கின. கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடங்களை ஒதுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கு முன்பாக பல முக்கிய சட்டங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில், பிப்ரவரி மாதம், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் வகையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படும்.
இதையும் படிக்க: Supreme Court : முழு பலத்துடன் இயங்கப்போகும் உச்ச நீதிமன்றம்.. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்படுமா?