Boat Accident : டைட்டானிக் கப்பலை போல மூழ்கிய படகு வீடு... மீட்க சென்றவர் பலி... தப்பித்த சென்னை இளைஞர்கள்
ஒரு படுக்கையறை கொண்ட படகு வீடு முதல் 10க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட பிரமாண்டமான படகு வீடுகள் வரை இங்கு இயக்கப்பட்டு வருகிறது.
![Boat Accident : டைட்டானிக் கப்பலை போல மூழ்கிய படகு வீடு... மீட்க சென்றவர் பலி... தப்பித்த சென்னை இளைஞர்கள் one died alappuzha houseboat accident chennai youths escaped where as saviour person died Boat Accident : டைட்டானிக் கப்பலை போல மூழ்கிய படகு வீடு... மீட்க சென்றவர் பலி... தப்பித்த சென்னை இளைஞர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/13/21ac57a67f76d58fe785d60a974d3082_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேரளாவில் படகு வீடு மூழ்கிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 3 சாப்ட்வேர் இன்ஜீனியர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கேரள மாநிலத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஆழப்புழாவில் உள்ள ஏரியில் இயக்கப்படும் நூற்றுக்கணக்கான படகு வீடுகள் உலகளவில் பிரபலமானவை. பல மாநிலங்கள், வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் இங்கு வந்து படகில் பயணம் செய்து இயற்கை அழகை ரசித்து செல்வது வழக்கம்.
ஒரு படுக்கையறை கொண்ட படகு வீடு முதல் 10க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட பிரமாண்டமான படகு வீடுகள் வரை இங்கு இயக்கப்பட்டு வருகிறது. ஒரு மணி நேரம் முதல் ஒருநாள் வரை படகுகள் வாடகைக்கு கிடைக்கும் நிலையில் பகலில் பயணம் செய்து இரவில் தங்கி இருப்பதற்கு ஏற்றவாறு ஸ்டார் ஹோட்டல்களில் செய்யப்படும் வசதிகள் இங்கு அமைக்கப்பட்டிருக்கும். தற்போது பருவமழை சீசன் என்பதால் அங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அந்த வகையில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜீனியர்களான லோகேஷ், பிரேம் மற்றும் ஹரி ஆகியோர் இருதினங்களுக்கு முன் ஆழப்புழா சென்று அங்கு ரமேசன் என்பவரின் படகு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். இரவில் 3 பேரும் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் நன்றாக தூங்கி கொண்டிருந்தனர்.அப்போது படகினுள் தண்ணீர் புகுந்துள்ளது.
இதனைக் கண்டு திடுக்கிட்டு எழுந்த அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட தொடங்கினர். உடனடியாக வெளியே தூங்கி கொண்டிருந்த படகின் ஊழியர் சத்தம் கேட்டு உள்ளே வந்து 3 பேரையும் காப்பாற்றினார். ஆனால் அதற்குள் படகில் முக்கால்வாசி நீரில் மூழ்கியது. இதனால் 3 பேரின் உடமைகளை எடுக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவரான பிரசன்னன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நன்கு நீச்சல் தெரிந்த அவர் படகின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து முதலில் பேக் உட்பட சில பொருட்களை வெளியே கொண்டு வந்துள்ளார். மீதமுள்ள பொருட்களை எடுப்பதற்காக மீண்டும் பிரசன்னன் படகினுள் சென்ற நிலையில் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர தேடலுக்குப் பின் படகின் அடியில் இருந்த பிரசன்னன் உடல் மீட்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் படகின் இன்ஜினை குளிர்விக்க அடியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும் டேங்க் உடைந்தது தான் விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)