Stalking Case : பிசியான ரோட்டில் ஒருவரை பின்தொடர்ந்து போவது எப்படி சாத்தியம்? குற்றம்சாட்டப்பட்ட ஆணை விடுவித்த நீதிமன்றம்
மும்பையின் பரபரப்பான காலை நேரங்களில் நடைபாதையில் செல்லும் ஒரு பெண்ணை, பின்தொடர்வது சாத்தியமற்றது எனக் கூறி குற்றம் சாட்டப்பட்ட நபரை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.
![Stalking Case : பிசியான ரோட்டில் ஒருவரை பின்தொடர்ந்து போவது எப்படி சாத்தியம்? குற்றம்சாட்டப்பட்ட ஆணை விடுவித்த நீதிமன்றம் Mumbai Magistrate Court acquitted 40-year-old man charge stalking woman observing highly impossible follow somebody on roads during rush hour Stalking Case : பிசியான ரோட்டில் ஒருவரை பின்தொடர்ந்து போவது எப்படி சாத்தியம்? குற்றம்சாட்டப்பட்ட ஆணை விடுவித்த நீதிமன்றம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/25/3b3487ef9b89e6196db7b72fa4fc21311666669389986290_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
40 வயது ஆண் ஒருவர் தன்னை பின் தொடர்வதாக பெண் அளித்த புகாரில், மும்பை சாலைகளில் ஒருவரைப் பின்தொடர்வது சாத்தியமற்றது எனக்கூறி நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை, கல்பாதேவி, சிரா பஜாரில் வாகனங்கள் நிறுத்துமிடம் வைத்திருக்கும் 40 வயது நபர் தினமும் காலையில் மரைன் லைன்ஸ் ஸ்டேஷனுக்கு நடந்து செல்கையில் தன்னை பைக்கில் பின்தொடர்வதாக பெண் ஒருவர் முன்னதாக புகார் அளித்திருந்தார். சிரா பஜாரில் வசிக்கும் இப்பெண் தினமும் தன் வேலைக்கு ரயிலில் சென்று வந்த நிலையில், ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் இந்த ஆணின் கேரேஜைக் கடந்து சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நபர் தன்னைக் கண்காணித்து வந்ததோடு, தனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும், கேரேஜைக் கடக்கும்போது அந்நபர் பைக்கில் தன்னை பின்தொடரத் தொடங்கியதாகவும் பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
மேலும் 2017-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 3-ஆம் தேதி தன்னுடன் எந்தவித அறிமுகமும் இன்றி, தன்னை நோக்கி கை அசைத்துப்பேச முயன்றதாகவும், தொடர்ந்து அச்சத்தில் தன் நண்பர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு அதன் அடிப்படையில் காவல்துறையில் புகார் அளித்தாகவும் அப்பெண் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இப்பெண்ணின் புகாரின் அடிப்படையில், 40 வயதான நபர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 354 டி பிரிவின் கீழ் பின்தொடர்ந்ததற்காக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பெண்ணின் குற்றச்சாட்டுகளை மறுத்த கேரேஜ் உரிமையாளர், தவறான புரிதலுடன் அப்பெண் தன் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்திருந்தார். இவ்வழக்கு முன்னதாக எஸ்பிளனேட் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் யாஷாஸ்ரீ மருல்கர், மும்பையின் பரபரப்பான சாலைகளில், குறிப்பாக காலை நேரங்களில் ரயில் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களை அடைய மக்கள் போராடிக்கொண்டிருக்கும் போது யாரையும் பின்தொடர்வது சாத்தியமில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், புகாரை பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், "அடிப்படையில், பரபரப்பான காலை நேரங்களில் நடைபாதையில் நடந்து செல்லும் ஒருவரை, அதுவும் சாலையின் மறுபுறத்தில் இருந்து பைக்கில் பின்தொடர்வது மிகவும் சாத்தியமற்றது" எனக் கூறி குற்றம் சாட்டப்பட்ட நபரை இவ்வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இந்நிலையில், மும்பை சாலைகளில் ஒருவரைப் பின்தொடர்வது சாத்தியமற்றது எனக்கூறி பெண்ணின் புகாரை ஏற்க மறுத்து குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றம் விடுவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)