வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடமுடியாதா? - மத்திய அரசுக்கு மும்பை நீதிமன்றம் கிடுக்கிப்பிடி..!
மாநில அரசுகள் சில வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துகையில், நாடு முழுவதும் ஏன் அப்படிச் செய்ய முடியாது? என்று மத்திய அரசை மும்பை உயர் நீதிமன்றம் கேள்வியால் துளைத்தெடுத்துள்ளது. நாடளவிலான தடுப்பூசித் திட்டத்தில் மத்திய அரசு திடமாக இருக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா, நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் அமர்வு, வெள்ளியன்று நடைபெற்ற விசாரணையின்போது இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளது.
”கேரளம், காஷ்மீர் போன்ற மாநில அரசுகள் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைக் கொண்டுவந்து, எப்படி அதை வெற்றிகரமாக மேற்கொள்கின்றன? அவர்களே செய்யும்போது மத்திய அரசுக்கு மட்டும் தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் என்ன பிரச்னை? இதில் என்ன சிக்கல் என்பது எங்களுக்கு விளங்கவில்லை” என்று மத்திய அரசை கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்துவிட்டனர்.
“இந்த மாநில அரசுகள் செய்வது பொருத்தமாக இருக்குமானால், மற்ற மாநிலங்களிலும் இதைப்போலவே செய்யுமாறு அவர்களிடம் மத்திய அரசு கேட்கமுடியுமே? அதன் மூலம் நாடளவிலான தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கியதாக இருக்குமே?” என நீதிபதிகள் கேள்விகளை முன்வைத்தனர்.
விசாரணையில் பங்கேற்பதற்காக, ”மும்பை மாநகராட்சியின் சார்பில் வழக்குரைஞர் அனில் சகாரே நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அரசியல்வாதி ஒருவருக்கு அவரின் வீட்டுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தியதைப் பற்றி ஏற்கனவே நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்குப் பதில் அளிக்க வந்திருந்த அவர், அந்தத் தடுப்பூசி மாநகராட்சி தரப்பிலிருந்து அவருக்கு செலுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, மகாராஷ்டிர மாநில அரசின் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் கீதா சாஸ்திரியிடம், அந்த அரசியல்வாதிக்கு யார் தடுப்பூசி செலுத்தியது என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அவர், பதில் அளிப்பதற்கு ஒரு வாரம் அவகாசம் வேண்டும் எனக் கூறினார். அவரின் இந்த பதிலைக் கேட்டு சட்டெனத் திரும்பிய தலைமை நீதிபதி தத்தா, “இந்தத் தகவலைச் சொல்ல ஒரு வாரம் வேண்டுமா..? என்ன இப்படிச் சொல்கிறீர்கள்.. இது மிகவும் கவலைக்குரியதாகும். உனக்கு ஒரு சட்டம்.. எனக்கு ஒரு சட்டம் என ஆளுக்கு ஒரு நீதியைப்போல் அல்லவா இருக்கிறது” என கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அதேசமயம், ”கொரோனா பெருந்தொற்றில் மும்பை மாநகராட்சி சிறப்பாகச் செயல்பட்டதாக நீதிபதிகள் பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்தனர். மாநகராட்சி சார்பில் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதில் என்ன தயக்கம்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மாநகராட்சியின் தரப்பில் பதிலளித்த வழக்குரைஞர், தாங்கள் தயாராக இருப்பதாகவும் அதற்கு மத்திய அரசுதான் வழிகாட்டல்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளரிடம் இது பற்றி அறிவுறுத்தலைக் கேட்டுப்பெறுமாறு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங்குக்கு உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். மத்திய அரசுத் தரப்பில் பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், கொரோனா பெருந்தொற்றானது நாடளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுடன் ஒத்துழைத்து பணியாற்றவேண்டும்” என்றார்.
”பொதுவான வழிமுறைகளை மத்திய அரசு வகுத்துத் தருகிறது. அந்த வழிகாட்டல்கள் எல்லா மாநில அரசுகளாலும் பின்பற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது. தடுப்பூசி வழிகாட்டலைப் பொறுத்தவரை நடப்பு சூழலுக்கு ஏற்ப உரியபடி உரிய நேரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது” என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.