(Source: ECI/ABP News/ABP Majha)
Mullaiperiyar Dam Issue: முல்லை பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்..!
முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
கேரள அரசும் , கேரள அரசை சேர்ந்த தனிநபர்களும் தொடர்ந்து முல்லை அணையின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி மனுதாக்கல் செய்து வருகின்றன. அந்த மனுக்களில் அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும், வேறு அணையை கட்ட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் அதில் இடம் பெற்றிருந்தன.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கேரள அரசு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவின் தன்மைகள் குறித்து கேள்விகளை எழுப்பியது. அத்துடன் மேற்பார்வை குழுவை மாற்றியமைக்க வேண்டும், மேற்பார்வை குழுவின் தலைவரை மாற்ற வேண்டும், அணையின் நீர் மட்டத்தை நீதிபதிகளே குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை கேரள அரசு முன்வைத்தது.
இந்தக்கேள்விகளுக்கு பதிலளித்த உச்சநீதிமன்றம், தங்களால் அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவின் அதிகாரத்தை அதிகப்படுத்துவது குறித்து வேண்டுமானால் கவனம் செலுத்தலாம். அதைத்தவிர்த்து, அணையின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லாமல் வீணான விஷயங்கள் எதையும் எழுப்பாதீர்கள் என அறிவுறுத்தினர்.
அணையின் நீர் மட்டத்தை நீதிபதிகளே குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது, கோபமடைந்த நீதிபதிகள் அணை குறித்தான நீர்திறப்பு குறித்தான அனைத்து முடிவுகளையும் மேற்பார்வை குழுவே எடுக்கும் என திட்டவட்டமாக கூறினர். மேலும் வழக்கின் முக்கியமான உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என்றும் கூறினர்.