Manipur Violence: நாட்டையே உலுக்கிய கலவரம்; பதற்றத்தில் இருந்து மீளாத மக்கள் - மணிப்பூரில் இயல்புநிலை திரும்புவது எப்போது?
மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட நேற்று முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
மணிப்பூரில் நடந்த கலவரம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மாநிலம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களை கண்காணிப்பதற்காக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ராணுவ ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை நிலைநிறுத்தப்பட்டது.
முன்பிருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில், தற்போது நிலைமை சற்று இயல்புநிலைக்கு திரும்பியதை தொடர்ந்து, அமலில் இருந்த ஊரடங்கு சில பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட நேற்று முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மேலும் வன்முறை அல்லது நிலையற்ற தன்மைக்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலையும் தவிர்க்க அனைத்து குடிமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என பிரேன் சிங் தெரிவித்துள்ளார். களத்தில் நிலவும் சூழலை ஆராய மூத்த அரசு அதிகாரிகள், துணை ராணுவ படையினர் ஆகியோருடன் இணைய வழி கூட்டத்தில் முதலமைச்சர் பிரேன் சிங் கலந்து கொண்டார்.
இயல்பு வாழ்க்கை திரும்புமா?
இதையடுத்து, சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்த முதலமைச்சர், மாநிலத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்த உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். பழங்குடி மற்றும் பழங்குடி அல்லாத பிரிவினருக்கிடையே நடந்த கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர இரு பிரிவினரின் சிவில் சமூக அமைப்புடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
பதற்றம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற இரு பிரிவினரும் ஒப்புக்கொண்டனர். சில பகுதிகளில் சிறிய சிறிய வன்முறை சம்பவங்கள் நடந்தாலும், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை பராமரித்து வருவதாக கூறப்படுகிறது.
மணிப்பூர் முழுவதும் சுமார் 14 பாதுகாப்புப் படை பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 20 பாதுகாப்புப் படை பிரிவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் இன்று காலை மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக ஊரடங்கு மூன்று மணி நேரம் தளர்த்தப்பட்டது.
மணிப்பூரில் நடத்தப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை பேரணியில் வன்முறை வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
மணிப்பூரில் என்ன பிரச்னை?
மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர். மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் பள்ளத்தாக்கில் இருப்பதால், மக்கள்தொகை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் இரண்டிலும் மெய்டீஸ் ஆதிக்கமே இருப்பதாக பழங்குடியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மெய்டீஸ் பழங்குடி சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.