Mamata Banerjee : 'வேற எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிங்க...பாஜகவுக்கு வேண்டாம்' - மம்தா பானர்ஜி
பாஜகவின் வீழ்ச்சி கர்நாடக தேர்தலில் இருந்து தொடங்கினால் மகிழ்ச்சி என மம்தா தெரிவித்திருப்பது அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கர்நாடகாவில் வரும் 10ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான முடிவுகள், 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
கர்நாடக தேர்தல்:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக தேர்தல் குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். பாஜகவின் வீழ்ச்சி கர்நாடக தேர்தலில் இருந்து தொடங்கினால் மகிழ்ச்சி என அவர் தெரிவித்திருப்பது அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
"பாஜகவுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டாம்"
சமீபகாலமாக, காங்கிரஸ் கட்சியையும் பாஜகவையும் ஒரு சேர எதிர்த்து வந்த மம்தா, தற்போது பாஜகவை மட்டும் விமர்சித்திருக்கிறார். மால்டா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா, "எவ்வளவு சீக்கிரம் பாஜக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படுகிறதோ அது நாட்டுக்கு நல்லது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம். நீங்கள் விரும்பும் வேறு எந்த கட்சிக்கும் வாக்களியுங்கள். பாஜகவின் வீழ்ச்சி கர்நாடகாவில் இருந்து தொடங்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன். இந்து மதத்தில் உள்ள ஆன்மீகத்தை பாஜக அழித்துவிட்டது" என்றார்.
டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும்போது, அவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய மம்தா, "டெல்லியில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். எத்தனை ராணுவ குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டன? பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்" என்றும் விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 13 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் ஏற்கனவே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மம்தாவை சமீபத்தில் சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து, பிஜு ஜனதா தளத்தின் தலைவரும் ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கை மம்தா சந்தித்தார். பாஜகவை போன்றே காங்கிரஸை எதிர்க்க இந்த மூன்று முக்கிய தலைவர்களும் முடிவு எடுத்ததாக தகவல் வெளியானது.
ஆனால், அதன் பிறகு, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மம்தாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு, காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை மம்தா தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.