Odisha Train Accident: தண்டவாளத்தில் காதல் கவிதைகள்.. பதைபதைக்க வைத்த காட்சிகள்..ரயில் பெட்டிகளுடன் நொறுங்கிய கனவுகள்
ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் காதல் கவிதைகள் எழுதப்பட்ட நாட்குறிப்பு, தண்டவாளத்தில் சிதறி கிடந்தது காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் காதல் கவிதைகள் எழுதப்பட்ட நாட்குறிப்பு, தண்டவாளத்தில் சிதறி கிடந்தது காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
பாலசோர் ரயில் விபத்து:
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாநகா பகுதியில் கடந்த 2ம் தேதி மாலையில், பயணிகள் ரயில் உட்ப்ட 3 ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலரது உடல் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேநேரம், உடல் நசுங்கி பலியான பலரது உடல்கள் இதுவரை அடையாளம் காணமுடியாத சூழலில் தான் உள்ளன. இதனிடையே, நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த நூற்றாண்டின் மோசமான ரயில் விபத்து பலரது வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோரின் கனவுகளை நொடிப்பொழுதில் வெறும் கனவுகளாகவே மாற்றி விட்டது. அந்த கனவுகளில் பலரது காதலும் உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக தான், சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படங்கள் மனதை ரணமாக்கும் விதமாக அமைந்துள்ளன.
தண்டவாளங்களில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள்:
100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளாகியதில், அதன் பெட்டிகள் பல எண்ணற்ற துண்டுகளாக உடைந்தன. இதில் பயணிகளின் உடமைகளும் நாலாபுறமும் சிதறியுள்ளன. அந்த வகையில் ஒரு பயணியின் நாட்குறிப்பில் (டைரி) இடம்பெற்று இருந்த காதல் கவிதைகள் தான் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதோடு, யானைகள், மீன்கள் மற்றும் மறுபுறம் சூரியன் போன்ற ஓவியங்களும் இடம்பெற்றுள்ள அந்த நாட்குறிப்பு யாருடையது என்பது இதுவரை தெரியவில்லை.
Found on the tracks, remains of the day: Love letters, poems, toys https://t.co/3rvH1JK20x. #OdishaTrainAccident #OdishaTrainTragedy #Odisha #TrainAccidentInOdisha pic.twitter.com/PLDsLH4inq
— deepankarthish (@deepankarthishb) June 4, 2023
காதல் கவிதை:
ஒரு கவிதையில் ”சிதறிய மேகங்கள் லேசான மழைக்கு வழிவகுக்கும், (இப்போது) நாம் கேட்கும் சிறு கதைகளிலிருந்து காதல் மலர்கிறது” என குறிப்பிடப்பட்டு இருந்தது. பாதி மட்டுமே எழுதப்பட்டுள்ள மற்றொறு கவிதையில் “அன்புடன் எப்பொழுதும் நீ வேண்டும், எப்பொழுதும் என் மனதில் நீ இருக்கிறாய்...” என எழுதப்பட்டுள்ளது. அதோடு, பல பரிசுப்பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொம்மைகள் போன்றவையும் தண்டவாலத்தில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் வைரலாக, நெட்டிசன்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நொடிபொழுதில் மொத்த கனவுகளையுமே மாற்றி விடும் இந்த வாழ்க்கை கணிக்க முடியாதது என்பது போன்ற கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.