டெல்லியில் மது தட்டுப்பாடு ! மூடப்பட்ட 468 மதுக்கடைகள் ! அண்டை மாநிலங்களுக்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள் !
அங்குள்ள தனியார் கடை உரிமையாளர்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் உள்ளிட்ட பல ஆஃபர்கள் மூலம் மதுக்களை இரவோடு இரவாக விற்க முனைப்பு காட்டியுள்ளனர்.
டெல்லியில் தனியார் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் அங்கு மது தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தனியார் மதுக்கடைகள் மூடல் :
டெல்லியில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டுக்கான புதிய மதுக்கொள்கையை அம்மாநில அரசு கொண்டு வந்தது. அதன் படி மதுபானங்களை சில்லறையாக விற்பனை செய்யவும், வீட்டுக்கே டோர் லெலிவரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த புதிய கொள்கையின் கீழ் 468 சில்லறை மதுபானக் கடைகள் நகரில் இயங்கி வந்தன. டிரையல் என்னும் சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய கொள்கை நேற்றுடன் (ஜூலை 31 ) உடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இன்று முதல் (ஆகஸ்ட் 1) மேற்குறிப்பிட்ட அனைத்து தனியார் மதுபான கடைகளையும் மூட உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு வழங்கிய உரிமத்தை திரும்ப பெற்றுள்ளது. இனி டெல்லி வாசிகள் அங்குள்ள அரசு மதுபான கடைகளில் மட்டுமே மதுக்களை வாங்கிக்கொள்ள முடியும். இது மதுப்பிரியர்கள் மற்றும் தனியார் மதுபான பிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தற்காலிக சிரமத்தை மதுப்பிரியர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
தட்டுப்பாட்டில் மதுப்பிரியர்கள் :
தனியார் மதுபான கடைகள் ஜூலை 31 இரவுடன் மூடப்படுவதால் , அங்குள்ள தனியார் கடை உரிமையாளர்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் உள்ளிட்ட பல ஆஃபர்கள் மூலம் மதுக்களை இரவோடு இரவாக விற்க முனைப்பு காட்டியுள்ளனர். இன்று (ஆகஸ்ட் 1) முதல் டெல்லியில் மிகப்பெரிய மது தட்டுப்பாடு ஏற்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. ”சனிக்கிழமை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது, ஆனால் மதுபானக் கடைகளில் இருப்பு இல்லாததால், இப்போது மதுப்பிரியர்கள் நொய்டா, காசியாபாத், குர்கான் மற்றும் ஃபரிதாபாத் உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுக்க தொடங்கியிருப்பதாக டெல்லியின் ஷேக் சராய் நகரில் மூடப்பட்ட மதுபான விற்பனை நிலையத்திற்கு வெளியே வாடிக்கையாளர் விவேக் கூறினார்.
குற்றச்சாட்டு :
இது ஒரு புறம் இருக்க புதிய மதுக்கொள்கையில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டிருப்பதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் அவர் சிபிஐ இதில் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறார். சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் பாஜக ஆம் ஆத்மி அரசை மிரட்ட பார்க்கிறார்கள் . நாங்கள் சிறைவாசத்திற்கு அஞ்சியவர்கள் அல்ல என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய நிலையில் தற்போது தனியார் மதுபான கடைகள் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்