LIC Hindi Imposition: இந்தித் திணிப்பா? எகிறி அடித்த தமிழகம், எண்ட் கார்டு போட்ட எல்ஐசி- பின்னணி இதுதான்!
இந்தி மொழி தெரியாத, புரியாத மக்கள் எல்.ஐ.சி.யின் வலைத்தளத்தை பயன்படுத்துவது எப்படி, நாடு முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் வலைத்தள பக்கம் ஏன் இந்தி மொழியில் இருக்கிறது என பலரும் கேள்வி எழுப்பினர்.
அரசு பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் இணையதளப் பக்கம் முழுமையாக இந்தியில் மாற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மீண்டும் ஆங்கிலத்துக்கே மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தி மொழி மட்டுமே முகப்பில் இருந்ததாகவும், அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் எல்ஐசி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
நடந்தது என்ன?
அரசு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சுரன்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா (LIC) இணையதள பக்கம், திடீரென முழுமையாக இந்தி மொழியில் மாற்றப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மாதம் வரை ஆங்கில மொழியில் இருந்தது, இந்தி மொழிக்கு மாறியிருந்தது. குறிப்பாக மாற்று மொழிகளாக ஆங்கிலமும் மராத்தியும் கொடுக்கப்பட்டு இருந்தன. மொழி என்பதும் இந்தி மொழியிலேயே இருந்ததால், மொழி மாற்றம் செய்ய முடியாத நிலை உருவானது.
இந்தி மொழி தெரியாத, புரியாத மக்கள் எல்.ஐ.சி.யின் வலைத்தளத்தை பயன்படுத்துவது எப்படி, நாடு முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் வலைத்தள பக்கம் ஏன் இந்தி மொழியில் இருக்கிறது என பலரும் கேள்வி எழுப்பினர்.
தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்
குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், எல்ஐசியின் இணையதளப் பக்கம், மீண்டும் ஆங்கிலத்துக்கே மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தி மொழி மட்டுமே முகப்பில் இருந்ததாகவும், அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் எல்ஐசி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துவதாகவும் எல்ஐசி தெரிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே கலாச்சாரமா?
முன்னதாக திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு மாற்றப்பட்டது.
பிறகு, தூர்தர்ஷனின் சின்னம் (லோகோ) ஆரஞ்சு வண்ணத்துக்கு மாற்றப்பட்டது. அதேபோல அரசு தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வண்ணமும் லோகோவும் மாற்றி அமைக்கப்பட்டது.
தொடர்ந்து எல்ஐசி இணையதளத்தின் மொழி இந்திக்கு மாற்றப்பட்டு, பிறகு ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எனினும் இதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று எல்ஐசி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.