தலைதெறிக்க ஓடிய யானை.. ஸ்ரீரங்கப்பட்டினம் தசரா திருவிழாவில் பரபரப்பு!
ஸ்ரீரங்கப்பட்டினம் தசரா திருவிழாவின்போது ஊர்வலத்தில் பங்கேற்ற யானை ஒன்று பாகனின் கட்டுப்பாட்டை மீறி திடீரென தலைதெறிக்க ஓடியது. இந்த சம்பவம் அப்பகுதியில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் தசரா திருவிழாவின்போது ஊர்வலத்தில் பங்கேற்ற யானை ஒன்று பாகனின் கட்டுப்பாட்டை மீறி திடீரென தலைதெறிக்க ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கப்பட்டினம் தசரா நிகழ்வு என்றாலே யானை சவாரிதான் பலருக்கும் ஞாபகம் வரும். அங்கு ஜம்பு சவாரி ஊர்வலமானது மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. அங்கு ஊர்வலமாக செல்லும் 2 யானைகள் அமைதியுடன் சாந்தமாக செல்லும்.
தசரா விழாவில் பரபரப்பு:
இந்த நிலையில், சாந்தத்திற்கு பெயர் போன தசரா யானை ஒன்று, திடீரென தலைதெறிக்க ஓடியது. அருகாமையில் இருந்த மக்கள், யானை ஓடுவதை கண்டு ஓடி ஒளிந்து கொண்டனர். பதற்றமான சூழலிலும், அமைதியாக இருந்த பாகன், தனது உதவியாளர்களுடன் சேர்ந்து யானையை அமைதிப்படுத்தினார்.
இதுகுறித்து துணை வன பாதுகாவலர் பிரபுகவுட் கூறுகையில், "யானை பீதி அடையவில்லை. ஆனால், எடுத்து செல்லப்பட வேண்டிய லாரியில் ஏறாமல் பிடிவாதமாக இருந்தது. ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு அதை லாரியில் ஏற்றியுள்ளார் பாகன்.
மகேந்திரா, லட்சுமி மற்றும் ஹிரண்யா ஆகிய மூன்று யானைகளும் ஸ்ரீரங்கப்பட்டணம் ஜம்பூ சவாரியை வெற்றிகரமாக முடித்துவிட்டு மைசூருக்குத் திரும்பின" என்றார். இருப்பினும், சத்தம் காரணமாக யானைகள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக விலங்கு உரிமை ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மோதி கொண்ட யானைகள்:
சமீபத்தில், மைசூரில் தசரா விழாவில் பங்கேற்ற யானைகள் மோதிக் கொண்டு ஓடியது அப்பகுதியில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது. மைசூர் அரண்மனை வளாகத்தில் இரவு உணவு உண்ணும் போது தசரா யானைகளான தனஞ்சயா மற்றும் காஞ்சன் ஆகிய இரு யானைகளுக்கு இடையே சிறிய மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனஞ்சய யானை, காஞ்சனைத் தாக்கி துரத்த முயன்றது. அப்போது, காஞ்சன் யானை பாகன் இல்லாமலேயே முகாமிலிருந்து வெளியேறி, இரும்பு தடுப்புகளைத் தள்ளிக்கொண்டு மைசூர் அரண்மனையின் ஜெயமார்த்தாண்ட வாயிலில் உள்ள கண்காட்சி சாலை அருகே தப்பிச் சென்றது. இதையடுத்து, மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தடுமாற்றத்துடன் ஓடினர்.
இதையடுத்து தனஞ்சயவின் யானை பாகன் இறுதியில் சமாதானப்படுத்தினார். மேலும், தனஞ்சய யானையை மீண்டும் முகாமுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கஞ்சன் யானையும் சாந்தமானது.