இனி ரயிலுக்கு குறுக்கே கால்நடைகள் வராது.. ரயில்வே நிர்வாகம் கையில் எடுத்த புதிய திட்டம்.. விவரம் என்ன?
ரயில் இருப்பு பாதைகள் குறுக்கே கால்நடைகள் வருவதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களின் போக்குவரத்து பயன்பாட்டில் ரயில்வே முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனை கருத்தில் கொண்டே மக்களின் தேவைக்கு ஏற்ப சேவையை வழங்க, ரயில்வே நிர்வாகம் பல்வேறு சீர்திருத்த திட்டங்களை கொண்டு வருகிறது. ரயில்வே உட்கட்டமைப்பை தொழில்நுட்பம் சார்ந்து மேம்படுத்த, குறிப்பாக விபத்துகளை தவிர்க்க ஆளில்லா ரயில் கிராஸ்சிங்கை முற்றிலுமாக சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேநேரம், வனப்பகுதிகள் வழியே இயக்கப்படும் ரயில்களின் குறுக்கே வன விலங்குகள் குறுக்கிடுவதாலும், திறந்தவெளியில் கால்நடைகள் குறுக்கிடுவதாலும் ஏற்படும் விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது. சமீப காலமாக ரயில்வே இருப்பு பாதையை மாடுகள் கடந்து செல்லும்போது, ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளது. குஜராத்தில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள், மாடுகள் மோதி பாதி வழியில் நின்றன. இதனால் கால்நடைகள் உயிரிழந்ததோடு, ரயிலின் முன்புறமும் சேதமடைந்து சேவையும் பாதிக்கப்பட்டது.
நடப்பாண்டில் மட்டும் சுமார் 4,000 ரயில்கள் கால்நடைகள் மீது மோதி விபத்து ஏற்பட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதத்தில் மும்பை - அகமதாபாத் வந்தே பாரத் ரயில் மீது கால்நடை மோதி தொடர் விபத்து ஏற்பட்டது. வடக்கு ரயில்வேயின் டெல்லி- மும்பை ரயில் பாதைகள், டெல்லி- ஹவுரா ரயில் பாதைகளில் தான், நாட்டின் கால்நடைகள் மீது ரயில் மோதும் பெரும்பாலான விபத்துகள் பதிவாகின்றன.
Railways Made Master Plan To Prevent Animal Accidents In Trains Boundary Wall Will Be Installed Along Tracks https://t.co/nQ2PUsdke6
— Daily Google News (@DailyPunjabNew4) November 16, 2022
இந்நிலையில், ரயில்வே இருப்பு பாதைகளை கால்நடைகள் கடக்கும்போது ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விதமாக, ரயில் பாதைகளை சுற்றி சுவர் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாட்டில் உள்ள ரயில் பாதைகளில் சுமார் 1,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக பல்வேறு டிசைன்கள் ஆலோசிக்கப்பட்டு அவற்றில் ஒன்றை தேர்வு செய்துள்ளதாகவும் கூறினார்.
அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் அடுத்த 6 மாதங்களில் ரயில்வே இருப்பு பாதையை சுற்றி 1,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுவர் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், அதன் மூலம் கிடைக்கும் பலன் அடிப்படையில் திட்டம் விரிவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். சுவர் அமைக்கும் திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதிலும் ரயில்வே நிர்வாகம் கவனமாக இருப்பதாகவும் ரயில்வே அமைச்சர் கூறினார். இதன் மூலம் விபத்துகள், கால்நடை உயிரிழப்புகள் தவிர்க்கப்படுவதோடு, ரயில் சேவையில் ஏற்படும் தாமதங்களும் தவிர்க்கப்படும் என நம்பப்படுகிறது.