இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.50 கோடியை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.50 கோடியை தாண்டியது. ஒரேநாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109 - இல் இருந்து ஒரு கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919- ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 150-ல் இருந்து ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 769-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 28 லட்சத்து 9 ஆயிரத்து 643-இல் இருந்து ஒரு கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 821 ஆக உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 86.62 சதவீதம் மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.20 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 லட்சத்து 29 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 13 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 12 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரத்து 566 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக, இந்தியாவில் இந்த வாரம் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.2 மில்லியனைத் தாண்டியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்த நிலவரத்தை உலக சுகாதாரம் மையம் வெளியிட்டுள்ளது.
11 ஏப்ரல்: 169,914 (பதிவானவை)
12 ஏப்ரல்: 160,838 (பதிவானவை)
13 ஏப்ரல்: 185,297 (பதிவானவை)
14 ஏப்ரல்: 199,584 (பதிவானவை)
15 ஏப்ரல்: 216,828 (பதிவானவை)
16 ஏப்ரல்: 234,002 (பதிவானவை)
17 ஏப்ரல்: 260,895 (பதிவானவை)
18 ஏப்ரல்: 275,196 (பதிவானவை)
வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11:30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு போல மத்திய அரசு வழிகாட்டுதலில் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உயர்அதிகாரிகள் பலருடன் நடக்கும் இந்த ஆலோசனைக்கு பின் இந்தியாவில் கொரோனா தடுப்ப நடவடிக்கைக்கு மத்திய அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கை குறித்து அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.