இந்தியா முழுவதும் 1.4 லட்சம் ஸ்டார்ட்அப்கள்.. மகாராஷ்டிராவுக்கு முதலிடம்.. 6ஆம் இடத்தில் தமிழகம்!
இந்தியாவிலேயே அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மகாராஷ்டிராவில்தான் உள்ளன என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாத் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 1.4 லட்சமாக உயர்ந்துள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று அவர் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், "தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையால் (DPIIT) அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்கள் மகாராஷ்டிராவில்தான் அதிகம் உள்ளன. முதலிடத்தில் உள்ள மகராஷ்டிராவில் 25,044 பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன.
எங்கு அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன? அதற்கு அடுத்தபடியாக, கர்நாடகாவில் 15,019 பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியில் 14,734 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருக்கின்றன.
நான்காம் இடத்தில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் 13,299 ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஐந்தாம் இடத்தில் உள்ள குஜராத்தில் 11,436 ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இருக்கின்றன. தமிழ்நாடு ஆறாம் இடத்தில் இருக்கிறது. அங்கு, 9,238 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன" என்றார்.
தொடர்ந்து விரிவாக பேசிய மத்திய அமைச்சர், "இந்தியாவில் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கவும் ஆதரவளிக்கவும் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளுக்கும் ஸ்டார்ட்அப்களுக்கும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக ஸ்டார்ட்அப்களுக்கு ஏதுவான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன், ஜனவரி 16, 2016 அன்று ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தை அரசாங்கம் தொடங்கியது.
மத்திய இணை அமைச்சர் தகவல்: நாட்டில் ஒரு துடிப்பான ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு அரசின் ஆதரவு, திட்டங்கள் மற்றும் ஊக்குவிப்புகளுக்கு செயல் திட்டம் அடித்தளம் அமைத்தது.
தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கான செயல்திட்டங்கள், பல்வேறு சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் பெரும் பங்கு, பங்குதாரர்களின் திறன்களை உருவாக்குதல் மற்றும் டிஜிட்டல் ஆத்மநிர்பர் பாரதத்தை செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
ஸ்டார்ட்அப்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ₹ 10,000 கோடியுடன் ஸ்டார்ட்அப்களுக்கான நிதியத்தை (FFS) அரசாங்கம் நிறுவியுள்ளது. ஆரம்ப நிலையிலும் நிதியை திரட்டுவதற்கான நிலையிலும் வளர்ச்சி அடைந்த நிலையிலும் ஸ்டார்ட்அப்களுக்கான மூலதனத்தை அரசாங்கம் கிடைக்கச் செய்தது.
அதுமட்டுமின்றி, உள்நாட்டு மூலதனத்தை உயர்த்துவதற்கும், வெளிநாட்டு மூலதனத்தை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், உள்நாட்டு மற்றும் புதிய மூலதனத்தை ஊக்குவிப்பதற்கு மூலதன நிதிகள் பங்காற்றியுள்ளது" என்றார்.