மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்
எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் நிலைகுலைந்து தரையில் விழுந்து விட்டேன். அவர்களின் கட்சிக்குள்(தி.மு.க.) பிரச்சினை உள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தின் போது திமுக கவுன்சிலர்களின் நெருக்கடி கேள்விகளை சமாளிக்க முடியாமல் ஓய்வறை நோக்கி ஓடி பின்னர் நெஞ்சு வலிக்கிறது என்று மேயர் சரவணன் தரையில் விழுந்து புரண்ட சம்பவம் சபைக்கு மிகப்பெரிய சங்கடம் என்று மேயருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நெஞ்சு வலிக்கிறது என்று கத்தி புரண்டு மேயர் கூட்டத்தை விட்டு வெளியே சென்றவுடன் துணை மேயர் சு.ப.தமிழழகன் உறுப்பினர்களிடம் பேசியதாவது:- நாட்டிற்கு ஜனாதிபதி எப்படியோ அதே போல் தான் மேயர் என்பவர் நகரத்தின் முதல் மனிதன். மேயர் சரவணன் மிக பெரிய பொறுப்பு உரியவர். இவர் மேயருக்கு உரிய உடையுடன் கீழே விழுந்து புறண்டது சங்கடமாக உள்ளது. மேலும் தி.மு.க. கவுன்சிலர் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தின் தலைவர்(மேயர்) இதே போல் நடந்து கொண்டது மிகபெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் சரவணனை கண்டிக்கிறோம் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றார்.
இதற்கிடையில் நெஞ்சு வலியால் துடித்த மேயர் சரவணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக அவர் தி.மு.க. கவுன்சிலர்கள் மீது புகார் தெரிவித்து கூறுகையில், தி.மு.க. மாவட்ட செயலாளரும், தி.மு.க. எம்.பியுமான கல்யாணசுந்தரம் அளித்த பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்களை ஏன் எங்களை கேட்காமல் கூட்ட பொருளில் வைக்கிறீர்கள் என தி.மு.க. கவுன்சிலர்கள் கேட்டனர். அதுமட்டுமின்றி கூட்டத்தை ஒத்தி வையுங்கள் என்றனர். கவுன்சிலர்கள் கூறிய படிதான் நான் கூட்டத்தை ஒத்தி வைத்தேன். அதற்குள் மாநகராட்சி கவுன்சிலர் குட்டி தட்சிணாமூர்த்தி என் மார்பில் தாக்கி கிழே தள்ளினார். இதனால் எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் நிலைகுலைந்து தரையில் விழுந்து விட்டேன். அவர்களின் கட்சிக்குள்(தி.மு.க.) பிரச்சினை உள்ளது. கல்யாணசுந்தரம் எம்.பி. பரிந்துரை செய்த தீர்மானங்களை நிறைவேற்றுவதில் எந்த தவறும் எனக்கு தெரியவில்லை என்றார்.