Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
தமிழ்த் திரையுலகினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் அமைதி காக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது நடந்த குற்றம், சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பி வந்த தமிழ்த் திரையுலகினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் அமைதி காக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் குவிந்து வருகின்றன.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக ஆகச்சிறந்த எதிர்க்கட்சியாகக் காத்திரத்துடன் செயல்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பெனிக்ஸ் கொலை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் கொடூரம் என மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு திமுக பல்வேறு போராட்டங்களை அறிவித்து வந்தது. திமுகவுடன் சமூக ஆர்வலர்களும் திரை நடிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
பல்கலைக்கழக வளாகத்திலேயே நிகழ்ந்த கொடூரம்
இந்த நிலையில், நாட்டின் புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த அதிர்ச்சி சற்றே குறையும் முன்பாகவே, மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வழக்கின் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் வெளியானது. அது எப்படி? குற்றவாளி, அந்த சாருடனும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில், அந்த சார் யார்? அமைச்சர்கள் யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர் என்று கேள்வி எழுந்துள்ளது. குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்பட்டு விட்டதாக திமுக அரசு பதிலளித்து வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டாமா?
எனினும் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏற்பட்ட சமூகப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்ற தமிழ் திரையுலகினர் இப்போது ஏன் அமைதி காக்கின்றனர் என்று கேள்விகள் எழுந்துள்ளன.
குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், கார்த்தி, நயன்தாரா உள்ளிட்டோர் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. கமல்ஹாசன் சார்பில் மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் ஓர் அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருந்தார். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவிர்த்து, பிற கூட்டணிக் கட்சியினர் யாரும் வலுவான கண்டனத்தைப் பதிவு செய்யவில்லை.
அமைதிக்கு என்ன காரணம்?
திரையுலகினரின் அமைதிக்கு என்ன காரணம்? ஆளும் கட்சி திமுக என்பதாலா? அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்ற சொல்லப்படுவதாலா என்று நெட்டிசன்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதே நேரத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ் , மோகன் ஜி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களது கண்டனத்தை பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.