உலக வரலாற்றில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், அதில் சிலதுதான் பிற்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, வரலாற்று நிகழ்வாக பதிவாகியிருக்கிறது. அந்த வகையில், அமெரிக்கா சுதந்திரம் பெற்றதையும், பிரெஞ்சுப் புரட்சியையும், ரஷியாவில் தோன்றிய சமூக எழுச்சியையும் குறிப்பிடலாம். ஆனால், அந்தச் சம்பவங்களை எல்லாம் காட்டிலும் இந்தியா சுதந்திரமடைந்த சம்பவமே உலகத்தில் மகத்தான நிகழ்வாக குறிப்பிடப்படுகிறது.
இந்திய சுதந்திரத்திலிருந்து உலகின் எதிர்காலம் நம்பிக்கையளிக்கக் கூடிய தன்மையைப் பெற்றதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. வரும் 15ஆம் தேதி, இந்தியா சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளை நிறைவு செய்து, 77ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பல போராட்டங்களுக்குப் பின், நாம் அடைந்த சுதந்திரத்தின் வெற்றியை முதல் சுதந்திர தினத்தில் வாழ்ந்த இந்தியர்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
இறக்கப்பட்ட யூனியன் ஜாக் கொடிகள்:
கொல்கத்தாவின் வில்லியம் கோட்டை, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை உட்பட பல முக்கிய இடங்களில் யூனியன் ஜாக் கொடிகள் மாலையில் இறக்கப்பட்டன. பல்வேறு முக்கிய ஆவணங்கள் மவுண்ட் பேட்டனின் மேசையில் இரவு 11.58க்கு வைக்கப்பட்டது. அதில், அவர் இறுதிக் கையெழுத்தினையிட்டார். இதை தொடர்ந்து, வைஸ்ராயின் மாளிகையிலிருந்தும் ஜாக் கொடி இறக்கப்பட்டது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு, மைய மண்டபத்தில் ராஜேந்திர பிரசாத் தலைமையில் 11 மணிக்கு கூட்டம் கூடியது. பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் சுதேசா கிருபளானி வந்தேமாதரம் பாடலை பாடினார். இரு நிமிடம், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு, வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார்.
"நீண்ட நெடுங்காலத்துக்கு முன் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அந்த ஒப்பந்தத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இரவு 12 மணி அடிக்கும்போது உலகம் உறங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா உயிர்த்துடிப்போடு சுதந்திரத்தில் கண் விழிக்கும்" என தெரிவித்தார். இதை தொடர்ந்து, இந்திய விடுதலை தொடர்பான தீர்மானத்தை நேரு முன்மொழிந்தார். செளத்ரி காலிக்-உஸ்-மான் வழிமொழிந்தார்.
பின்னர், பெண்களின் சார்பாக ஹன்சா மேத்தா மூவர்ணக் கொடியை எடுத்து கொடுக்க, இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு அதற்கு பதில் சுதந்திர இந்தியாவின் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடியை ஏற்றினார். "இந்தியா விடுதலை அடைகிறது" என்ற அரசியல் அமைப்பு சட்டமன்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.
பதவியேற்ற அமைச்சர்கள்:
அதன் பிறகு, ராஜேந்திர பிரசாத்தும் நேருவும் முறைப்படி மவுண்ட் பேட்டனை நள்ளிரவு சந்தித்து அமைச்சரவை விவரங்களை முறைப்படி அளித்தனர். அமைச்சரவையில், நேருவைத் தவிர 13 அமைச்சர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. அதில், ஒருவர் சீக்கிய பிரதிநிதி. சென்னையைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார், சியாமா பிரசாத் முகர்ஜி, அம்பேத்கர் ஆகியோரின் பெயர் இடம்பெற்றிருந்தது.
மறுநாள் காலை, அமைச்சர்கள் உறுதிமொழி எடுக்கும் விழா, தர்பார் மண்டபத்தில் காலை 8-30 மணிக்கு தொடங்கியது. கவர்னர் ஜெனரலாக மவுண்ட் பேட்டன் பொறுப்பேற்றார். டெல்லியில் சிற்றரசர்கள், அரசு தூதுவர்கள் என 500 பேர் குழுமியிருந்த விழாவில், 5 இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர். காலை 10-30 மணிக்கு பேன்ட் வாத்திய முழக்கத்துடன் ஒவ்வொருவருவரும், 5 லட்சம் மக்களின் கரகோஷத்திற்கு மத்தியில், அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதை தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா முடிவடைந்து மண்டபத்தில் எல்லை நிர்ணய குழு அறிக்கை மூன்று மணி நேரம் படிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு இந்திய கேட்டில் கொடியேற்று விழா என 3 முறை கொடியேற்றப்பட்டது. தலைநகரில் மட்டும் 300 கொடியேற்று விழாக்கள் நடைபெற்றன.
மவுண்ட்பேட்டன் ஒவ்வொரு அறையிலும் இருந்த வைஸ்ராய்களின் பெயரை மாற்றினார். தர்பாரின் மேற்கூரையிலிருந்த பிரிட்டிஷ் அரச சின்னத்தை மறைத்தனர். ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். பலரின் மரண தண்டனைகள் குறைக்கப்பட்டன.
காந்தி எங்கே இருந்தார்?
சுதந்திரத்துக்கு இருவாரங்கள் முன்பு காந்தி டெல்லியை விட்டு வெளியேறினார். காஷ்மீரில் நான்கு நாட்கள் இருந்தபிறகு கல்கத்தாவுக்கு ரயில் ஏறினார்.13ஆம் தேதி மதியம் முஸ்லிம்கள் அதிகம் இருந்த பெலியகட்டாவில் இருந்து கலவரத்தை அடக்க முயன்றி செய்தார். ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு ஹைதாரி மாளிகையிலிருந்து பிரார்த்தனை கூடம் நோக்கி சென்றார்.
கிழக்கு பாகிஸ்தானின் முதன்மை அமைச்சராகவிருந்த காஜா மொகைதீன் பிற்பகலில் டாக்கா நோக்கி சென்றார். எல்லைகள் வரையறுக்கப்படாததாலும், கலவரங்களாலும் நிறைந்திருந்தன வங்கம். தீவிரமாய் உருவாகவிருந்த கலவரத்தை தீரத்துடன் அடக்கி முயற்சி செய்த காந்தி, விடுதலையை எண்ணி கொஞ்சம் கூட மகிழ்ச்சியாக இருக்கவில்லை. பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் செய்திகள் அவரை கலக்கமுறச் செய்தன.
நாடே கொண்டாட்ட மனநிலையில் இருந்தபோது, ஆகஸ்ட் 15ம் தேதி 24 மணி நேர உண்ணாவிரதம் இருந்தார் காந்தி. கல்கத்தா, பீகார் என வன்முறை பரவிக் கொண்டே இருந்தன. அங்கு அமைதி ஏற்பட ஏழு வாரத்தில் 116 மைல் சுற்றுப்பயணம் செய்தார்.