11 AM Headlines: மாணவர்கள் தாக்கிக் கொண்டதில் ஒருவர் பலி, ரெப்போ வட்டியில் மாற்றம்? டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்
11 AM Headlines: உள்ளூர் முதல் உலக நாடுகளை வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
காங்கிரஸ் கூட்டணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
ஜம்மு&காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த ஜம்மு காஷ்மீரின் கண்ணியம் மற்றும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான ஆணைதான் இந்த தேர்தல் முடிவுகள்” என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுத பூஜை விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு. கிளாம்பாக்கத்தில் இருந்து 1,105 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 300 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 110 பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து 200 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன
தங்கம் விலை மீண்டும் சரிவு:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.56,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 7 ஆயிரத்து 30 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாணவர்கள் தாக்குதலில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வாசலில் கடந்த 4ம் தேதி நடந்த மோதலில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்ட, மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரிகளில் போலீசார் பாதுகாப்பு. மின்சார ரயில் வழித்தடத்திலும் தீவிர கண்காணிப்பு
நாளை லாவோஸ் செல்கிறார் பிரதமர் மோடி
ஆசியான் - இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நாளை மறுநாள் நடக்கிறது. இதைப்போல கிழக்கு ஆசியா அமைப்பின் 19-வது உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது. இத்ல் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை லாவோஸ் புறப்பட்டு செல்கிறார். மாநாட்டில் பங்கேற்பதோடு, உறுப்பு நாடுகளின் தலைவர்கர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ராணுவ வீரர்கள் 2 பேர் கடத்தல்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் ரோந்து சென்றபோது, 2 பேர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் ஒருவர் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி வந்துள்ளார். இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து, காணாமல் போன வீரரை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும் என தெரிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பு பலவீனமாகிவிட்டது - நேதன்யாகு
ஹிஸ்புல்லா அமைப்பு குறித்து பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, “ஹிஸ்புல்லா அமைப்பின் நஸ்ரல்லாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் இருந்தவர்களை வீழ்த்திவிட்டோம். ஹிஸ்புல்லா அமைப்பு பலவீனமாகவிட்டது. ஹிஸ்புல்லாவிடம் இருந்து ஹிஸ்புல்லாவிடம் இருந்து விடுபடுங்கள். அப்போதுதான் இந்த போர் முடியும் என்று லெபனான் மக்களிடம் நான் கூறிக்கொள்கிறேன்" என்றார்.
டாம் லாதம் தலைமையில் நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு. வரும் 16ம் தேதி முதல் போட்டி தொடக்கம். டாம் லதாம் தலைமையிலான அணியில், ப்ளண்டெல், சாப்மன், கான்வே, ஹெண்ரி, டேரெல், ஓ ரூகே, அஜாஸ், பிலிஃப்ஸ், ரச்சின், சாண்ட்னர், சீர்ஸ், சோதி, டிம் சௌதி, வில்லியம்சன், யங் ஆகியோருக்கு இடம்
ஜோ ரூட் இமாலய சாதனை:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை, இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் பெற்றுள்ளார். அதிக சதங்கள் (16) என்ற விளாசிய வீரர் என்ற சாதனையையும் தன்னகத்தே கொண்டுள்ளார்.