ராமாயணத்தை பகடி செய்து நாடகம் அரங்கேற்றியதால் சர்ச்சை.. மாணவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம்!
ஐஐடி மும்பையில் ராமாயணத்தை கிண்டலடிக்கும் விதமாக மாணவர்கள் சிலர் நாடகம் ஒன்றை அரங்கேற்றியதால் சர்ச்சை வெடித்துள்ளது.
'ராஹோவன்' என்ற பெயரில் ராமாயணத்தை கிண்டலடிக்கும் விதமாக மும்பை ஐஐடி மாணவர்கள் நாடகம் ஒன்றை அரங்கேற்றியதால் சர்ச்சை வெடித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி, ஐஐடி மும்பையில் நடந்த கலை நிகழ்ச்சியின்போது இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மாணவர்கள் அரங்கேற்றிய நாடகத்தால் சர்ச்சை: இந்த நாடகத்திற்கு எதிராக மாணவர்கள் சிலர் புகார் அளித்தனர். மரியாதைக்குரிய இந்து இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடகம் இயற்றப்பட்டது என்றும் இந்து நம்பிக்கைகள் மற்றும் தெய்வங்களை இழிவுபடுத்தும் குறிப்புகள் இந்த நாடகத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் மாணவர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களை பகடி செய்யும் விதமாகவும் பெண்ணியத்தை ஊக்குவிக்கிறோம் என்ற போர்வையில் கலாச்சார விழுமியங்களை கேலி செய்துள்ளதாகவும் அவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து கடந்த மே மாதம் 8ஆம் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடந்தது.
அதில், மாணவர்களுத்து அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு மாணவர்களுக்கு தலா 1.2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு செமஸ்டர் கல்விக் கட்டணத்திற்கு இணையாக அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதித்த கல்லூரி நிர்வாகம்: மற்ற நான்கு மாணவர்களுக்கும் தலா 40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பட்டம் பெற உள்ள மாணவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஐஐடி ஜிம்கானா விருதுகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, விடுதி வசதிகளை பயன்படுத்த ஜூனியர் மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 20ஆம் தேதிக்குள் மாணவர் விவகாரங்களின் டீன் அலுவலகத்தில் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தேதிக்குள் அபராதத்தை செலுத்தவில்லை என்றால் கூடுதல் தண்டனைகள் வழங்கப்படும் என்று ஐஐடி மும்பை நிர்வாகம் எச்சரித்துள்ளது. நாடகத்தில் ராமர் மற்றும் ராமாயணத்தை கேலி செய்ததாக சமூக ஊடகங்களில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, 'ஐஐடி பி ஃபார் பாரத்' என்ற மாணவர் குழு பதிவிட்டது.
மதிப்பிற்குரிய கதாபாத்திரங்களை கேலி செய்ய தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை மாணவர்கள் தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி, நாடகத்தின் வீடியோ கிளிப்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டனர். 'ஐஐடி பி ஃபார் பாரத்' வெளியிட்ட பதிவில், "ராமாயணத்தை இழிவாக சித்தரித்து 'ராஹோவன்' நாடகத்தை அரங்கேற்றியவர்கள் மீது ஐஐடி மும்பை நிர்வாகம் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை வரவேற்கிறோம்.
கல்லூரி வளாகத்தில் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதமும் கேலி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.