Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
Water Bell in TN schools: வாட்டர் பெல் திட்டத்தின்கீழ், பள்ளியில் ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும். இந்த மணி வழக்கமான சத்தத்தில் இருந்து, மாறுதல் ஒலியில் ஒலிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில், தண்ணீர் பெல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கேரள மாநிலங்களில் இந்த முறை ஏற்கெனவே அமலில் உள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் தண்ணீர் பெல் அறிமுகம் செய்யப்படுகிறது.
அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த உரிய நடவடிக்கை
நீர்ச்சத்து குறைபாட்டுடன் குழந்தைகள் மருத்துவமனைக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.
கேரளா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடக மாநிலங்களில்தான் இந்தத் திட்டம் முதலில் அமலானது. இதன் வெற்றியைக் கண்டு இப்போது தமிழ்நாட்டிலும் அமலுக்கு வந்துள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
வாட்டர் பெல் திட்டத்தின்கீழ், பள்ளியில் ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும். இந்த மணி வழக்கமான மணி சத்தத்தில் இருந்து, மாறுதல் ஒலியில் ஒலிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு வாட்டர் பெல் அடிக்கப்படும். அப்போது குழந்தைகள் தண்ணீர் அருந்த ஊக்குவிக்கப்படுவார்கள். எனினும் பள்ளிகளின் இடைவேளை நேரத்தைப் பொறுத்து, 3 முறை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
இதன்படி பள்ளிகளுக்கு மாணவர்கள் வாட்டர் பாட்டிலை தண்ணீருடனோ அல்லது தண்ணீர் இல்லாமலோ கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள்
இதன்படி வகுப்பறைகளில் தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் அளிக்கப்படும். இதற்காக வகுப்புகளுக்கு வெளியே மாணவர்கள் செல்லக் கூடாது. வகுப்பு சூழலுக்கு இடையூறு நேராதவாறு, உள்ளேயே தண்ணீரை அருந்த வேண்டும்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில், மாணவர்களுக்கு விளக்கமாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு பெற்றோர், பள்ளிக் குழந்தைகள், மருத்துவர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எப்போதும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது பல்வேறு உபாதைகளில் இருந்தும நம்மைக் காப்பாற்றும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.






















