பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான எந்த நெடுவரிசையோ அல்லது விவரங்களோ இருக்கக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை.

பள்ளி மாணவர்களிடையே சாதி மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள், கருத்து வேறுபாடுகள் அடிப்படையில் வன்முறை உருவாவதைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்க்கவும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
’’அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களும் ஊழியர்களும் சமூகப் பிரச்சினைகள், சாதி பாகுபாடு மற்றும் பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள், ராகிங் மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் மற்றும்பல்வேறு சட்டங்கள் தொடர்பாக தாங்களும் தலைமை ஆசிரியர் நடத்தும் கூட்டத்தில் கலந்தாலோசித்து பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்குவதற்கு திட்டமிடல் வேண்டும். அவ்வப்போது பள்ளிக் கல்வி இயக்கத்திலிருந்து வழங்கப்படும் ஆணைகளின் அடிப்படையில் இச்செயல்பாடுகளை நன்கு திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும்.
இருக்கை ஒதுக்கீட்டை மாற்றுக
ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களுக்கான இருக்கை ஒதுக்கீட்டை உயரத்திற்கேற்ப அவ்வப்போது மாற்றி அமைத்து அமரச்செய்தல் வேண்டும். உடல் ஊனமுற்ற மாணவர் மற்றும் கண்பார்வை குறைபாடு உள்ள மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்களை 15 நாட்களுக்கு ஒரு முறை வரிசையிலும் மாற்றி அமரச் செய்தல் வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்களை மந்தனமாக (ரகசியமாக) வைத்திருக்க வேண்டும்.
மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான எந்த நெடுவரிசையோ அல்லது விவரங்களோ இருக்கக்கூடாது.
சாதியைக் குறிப்பிட்டு அழைக்கக் கூடாது
எந்த நேரத்திலும் வகுப்பு ஆசிரியர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களின் சாதியைக் குறிப்பிட்டு மாணவர்களை அழைக்கவோ, மாணவரின் சாதி அல்லது சாதிக்குக் காணமான தன்மை பற்றி எந்த இழிவான கருத்துக்களையும் தெரிவிக்கவோ கூடாது.
எந்தவாரு மாணவரின் உதவித் தொகை தொடர்பாக பெறப்பட்ட தகவல் தொடர்புகளின் விவரங்களை அறிவிப்பதற்கான இடம் வகுப்பறைகள் அல்ல. அத்தகைய தகவல் தொடர்புகள் பெறப்பட்டால், தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மாணவர்களை தனியே அழைக்காமல் குழுவாக அழைத்து தகவலை வாய் மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ வழங்க வேண்டும். இந்நேர்வுகளில் பெற்றோர்களுக்கு குறுச்செய்தி அலைபேசி வாயிலாக அனுப்பிடவும் தெரிவிக்கப்படு கிறது.
பள்ளியில் மாணவரின் தனிப்பட்ட விவரங்கள் ஒரு பதிவு கோப்பாகப் பராமரிக்கும் நிலையில் தலைமை ஆசிரியர் அனுமதியுடன் மட்டுமே அக்கோப்பினை பயன்படுத்திட வகுப்பாசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலைமை ஆசிரியரால் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.
சாதி அடையாளங்களை தவிர்க்க வேண்டும்
மாணவர்கள் வண்ண மணிக்கட்டு பட்டைகள், மோதிரங்கள் அல்லது வேறுபாடுகளை வெளிப்படையாக தெரியக்கூடிய அடையாளங்கள் அணிவதைத் தடை செய்வதோடு அவற்றை அணிவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அவ்வப்போது வழங்க தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிப்பிடும் அல்லது சாதி தொடர்பான உணர்வுகளை வெளிப்படுத்தும் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வருவதையும் தவிர்க்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றத் தவறினால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்துவதோடு கூடுதலாக, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
சாதி ரீதியாக உணர்வுகளை வெளிப்படுத்தும் மற்றும் அணுகக் கூடிய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தக்க வழிக்காட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கிடல் வேண்டும்.
பள்ளி வளாகங்களில் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்துவதை தடை செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
நன்நெறி வகுப்புகள் கட்டாயம்
அனைத்து வகையான பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நன்நெறி வகுப்புகள் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்.
சுழற்சி முறையில் இந்த நன்நெறி விரிவுரையை வழங்க ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரை நியமிக்க வேண்டும். கூடுதலாக, இந்த விரிவுரைகளில் பங்களிக்க நன்கு தகுதி வாய்ந்த வெளிநபர்களையும் அழைக்கலாம்.
எந்தவொரு மாணவரும் போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டால், அந்த மாணவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க தலைமையாசிரியர், பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கு பரிந்துரைத்து மற்றும் சார்ந்த வகுப்பாசிரியர் மாணவரின் முன்னேற்றத்தை கண்காணித்தல் வேண்டும்.
ஆசிரிய வழிகாட்டி
மாணவர்களுக்கு பள்ளி அளவில் ஆசிரிய வழிகாட்டி (Teacher Counsellor) ஒருவரை நியமித்தல் வேண்டும். மாணவியருக்கென கட்டாயமாக பெண் ஆசிரியர் ஒருவரை நியமித்தல் வேண்டும். ஆண் மாணவர்களுக்கு பெண் அல்லது ஆண் ஆசிரியரை நியமிக்கலாம்.
ராகிங், போதைப் பொருள் அச்சுறுத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் சாதி பாகுபாடு, கருத்து வேறுபாடு தொடர்பான தவறுகள்/குற்றச் செயல்பாடுகள் தொடர்பாக மாணவர்களின் செயல்பாடை கண்காணித்து பல்வேறு கல்வி சார் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளின் பொறுப்பு ஆசிரியர்கள்/வகுப்பு ஆசிரியர் ஆகியோர் ஒருங்கிணைந்து விவரங்களை ஆய்வு செய்து பள்ளித் தலைமை ஆசிரியருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்’’.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.






















