மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
சென்னையில் நாளை மறுநாள் 120 மின்சார பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல்களுக்கு மாற்றாக மின்சார சக்தியில் வாகனங்களை இயக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த பட்டியலில் இந்தியாவிலும் கார்கள் உள்ளிட்ட பல போக்குவரத்து வாகனங்கள் மின்சார வாகனங்கள் தயாரிப்பிலும், பயன்பாட்டிலும் உள்ளது.
நாளை மறுநாள் முதல் மின்சார பேருந்துகள்:
தமிழக அரசும் போக்குவரத்து சேவையிலும் மின்சார பேருந்துகளை அதிகளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் மின்சார பேருந்துகள் முதற்கட்டமாக வரும் திங்கள் கிழமை முதல் இயக்கப்பட உள்ளது. இதற்காக மின்சார பேருந்துகளுக்கு மின்சாரம் ஏற்றுவதற்கான வசதிகள் கொண்ட 5 சிறப்பு பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் சென்னையில் முதற்கட்டமாக 120 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த பேருந்துகள் ஏசி வசதியுடனும், ஏசி இல்லாமல் சாதாரண பேருந்து வசதியுடனும் இயக்கப்படுகிறது. புதியதாக இயக்கப்பட உள்ள இந்த மின்சார பேருந்துகள் தாழ்தள பேருந்துகளாக உருவாக்கப்பட்டுள்ளது.
5 பணிமனைகள்:
இந்த மின்சார பேருந்துகளுக்கான பணிமனைகள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி மற்றும் சென்ட்ரலில் அமைக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி பணிமனையில் இருந்து 13 வழித்தடங்களிலும், பெரும்பாக்கத்தில் இருந்து 11 வழித்தடங்களிலும், தண்டையார்பேட்டையில் இருந்து 10 வழித்தடங்களிலும், பூந்தமல்லியில் இருந்து 8 வழித்தடங்களிலும், சென்ட்ரலில் இருந்து 10 வழித்தடங்களிலும் இந்த புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

கட்டணம் எப்படி?
இந்த பேருந்து மின்சார பேருந்து என்பதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு வேண்டாம். ஏனென்றால், மற்ற மாநகர பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணமே இந்த பேருந்துகளிலும் வசூலிக்கப்படும். மின்சார பேருந்துகளின் தேவைகளைப் பொறுத்து புதிய வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
காற்று, ஒலி மாசுக்கு டாடா:
சென்னையில் இயக்கப்பட உள்ள இந்த புதிய மின்சார பேருந்துகளில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கி.மீட்டர் வரை பேருந்தை இயக்கலாம். வழக்கமான பேருந்துகளில் வரும் சத்தம் மற்றும் புகை இந்த பேருந்துகளில் இருக்காது என்பதால் இதனால் ஒலி மற்றும் காற்று மாசு பெருமளவு குறையும் என்று போக்குவரத்து கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
45 வழித்தடங்கள்:

நாளை மறுநாள் தொடங்கப்பட உள்ள இந்த மின்சார பேருந்துகள் சென்னை மாநகரம் முழுவதும் மொத்தம் 45 வழித்தடங்களில் இயங்க உள்ளது. 5 பணிமனைகள் என்றாலும் பிராட்வே, கோயம்பேடு, அண்ணா சதுக்கம், திருவொற்றியூர், கிளாம்பாக்கம், சென்ட்ரல், கோவளம், தி.நகர், தாம்பரம், கிண்டி, வள்ளலார்நகர், கண்ணதாசன் நகர், மாதவரம், பெரம்பூர், மணலி என சென்னையின் முக்கியமான 45 வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
புதியதாக இயக்கப்பட உள்ள மின்சார பேருந்துகளில் சிவப்பு நிற பேருந்து ஏசி வசதி கொண்ட மின்சார பேருந்து ஆகும். நீல நிற மின்சார பேருந்து ஏசி வசதி இல்லாத மின்சார பேருந்து ஆகும். அடுத்தாண்டு இறுதிக்குள் மொத்தம் 1000 மின்சார பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.





















