தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
பாஜக-வுடன் தேர்தல் கூட்டணிதான் வைத்துள்ளோமே தவிர அவர்களின் கொள்கைகளுடன் சமரசமாகி போகவில்லை என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதிமுக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் அதிமுக - பா.ஜ.க. கூட்டணி, சட்டமன்ற தேர்தல், மதுரை முருக பக்தர்கள் மாநாடு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
சகித்துக் கொள்ள முடியாது:
அதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது, தமிழ் கடவுள் முருகப்பெருமானின் பெயரில் நடக்கக்கூடிய பக்தர்களின் மாநாடாக கருதியதால்தான் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோம். முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பிறகுதான் அண்ணா, பெரியாரை இழிவுபடுத்தும் வீடியோக்கள் அங்கே ஒளிபரப்பப்பட்டதே எங்களுக்குத் தெரியும்.
இளைஞர்கள் சிலர் 20, 25 ஆண்டுகால பழைய வீடியோக்களை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. திட்டமிட்டு நடந்த தவறாகத் தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் கொள்கை முன்னோடிகள் அவமதிக்கப்படுவதை அதிமுக சகித்துக் கொள்ளாது.
பாஜக கொள்கைகளுடன் சமரசமா?
பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளோமே தவிர, அவர்களின் கொள்கைகளுடன் சமரசமாகிப் போகவில்லை. முருக பக்தர்கள் மாநாட்டுத் தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ நாங்கள் ஏற்கவில்லை. அதேபோல தந்தை பெரியார், அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோவைக் கண்டிக்கும் வகையில் கட்சியில் இருந்து தெளிவான அறிக்கையும் வெளிவந்திருக்கிறது. எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் உத்தரவிற்கேற்பவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
சிக்னல் கொடுத்த திருமாவளவன்:
திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கும் மனக்கஷ்டத்தையும், திமுக மீதான மனக்குமுறலையும் வேறு விதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இது அவர் எங்களுக்கு கொடுக்கும் சமிக்ஞை. எதிரியை மொத்தமாக வீழ்த்த கூட்டணியை பலப்படுத்திக் கொண்டே போவதில் தவறில்லை. இன்றைய சூழலில் அதிமுக 200 தொகுதிகளை வெல்லும். அதற்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என நினைக்கிறேன்.
அதிகாரப்பகிர்வு தமிழ்நாட்டிற்கு எப்போதும் பொருந்தாத ஒன்று ஆகும். இதனால், அதிமுக தனிப்பெரும்பான்மையுடனே ஆட்சி அமைக்கும். திமுக கூட்டணியில் எங்கே இருக்கிறது கொள்கை? மொழிப் போர் தியாகிகளையும், 2 லட்சம் ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்த காங்கிரசோடு கூட்டணி வைத்திருக்கிறார்களே. அது கொள்ள்கை கூட்டணி அல்ல. கொடூர கூட்டணி.
கொடூர கொள்ளைக் கூட்டணி:
மிசா ஸ்டாலின் என தம்பட்டம் அடிக்கிறார்களே? மிசா சட்டத்தை பாய்ச்சியது யார்? காங்கிரஸ் - திமுக மத்தியில் பல்லாயிரம் கோடியை சுருட்டிய கொள்ளைக் கூட்டணி என்பதே சரியாக இருக்கும். இந்த கொடூர கொள்ளைக் கூட்டணியை வீழ்த்துவதே எங்கள் இலக்கு.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
மேலும், அவரிடம் டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக மீதான விமர்சனத்தை நிறுத்திவிட்டது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, அம்மாவின் பிள்ளைகள் அனைவரும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பார்கள். கூட்டணியின் இறுதி வடிவத்தை எங்கள் பொதுச்செயலாளர்தான் முடிவு செய்வார் என்றார்.





















