Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். இதனால், போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

காதல் விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏனென்றால், இந்த வழக்கில் புதிய பாரதம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் சிக்கியதே இதற்கு காரணம்.
தலைமறைவான பூவை ஜெகன்மூர்த்தி:
இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அவர் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது முன்ஜாமின் மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர். ஆனால், பூவை ஜெகன்மூர்த்தி போலீசார் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்ய 4 தனிப்படை போலீசாரை திருவள்ளூர் போலீசார் அமைத்துள்ளனர். இதனால், பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கு:
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். பெண்ணின் பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனுஷைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் இல்லாத நிலையில் அவரது தம்பியை கடத்திச் சென்று மிரட்டியதாக தனுஷின் தாயார் காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்தார்.
அதில், புரட்சி பாரதம் தலைவரும், கேவி குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. வழக்கு விசாரணை சூடுபிடித்த நிலையில், ஏடிஜிபி ஜெயராமன் இடைநீக்கம் செய்யப்பட்டு பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவால் அவரது பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடத்தப்பட்ட சிறுவன் மீண்டும் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்ட வாகனம் ஏடிஜிபி ஜெயராமனுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட காவல் வாகனம் என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறை வாகனத்திலே கடத்தல் சம்பவம் நடந்தது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரத்தான முன்ஜாமின்:
சிறுவனை கடத்திய வழக்கில் பெண்ணின் தந்தை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் போலீசார் மணிக்கணக்கில் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்திக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரியிருந்தார்.
ஆனால், அவரது முன்ஜாமின் மனுவை நேற்று உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, அவரை போலீசார் எப்போது வேண்டுமானாலும் கைது செய்வார்கள்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீசாரின் கைது நடவடிக்கைக்கு அஞ்சியே பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.




















